சுடச்சுட

  
  spt6

  லண்டன், ஆக.8: ஒலிம்பிக் மகளிர் 51 கிலோ ஃபிளைவெயிட் பிரிவு அரையிறுதியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி கண்டார்.

   இருப்பினும் அரையிறுதி வரை முன்னேறியதன் மூலம் அறிமுக ஒலிம்பிக் போட்டியிலேயே வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் மேரி கோம். புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் மேரி கோம் 6-11 என்ற புள்ளிகள் கணக்கில் பிரிட்டனின் நிகோலா ஆடம்ஸிடம் தோல்வி கண்டார்.

   பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப் போட்டியில் ஆரம்பம் முதலே நிகோலா ஆடம்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். அவரின் ஆட்டத்துக்கு முன்பு மேரி கோமின் ஆட்டம் கடைசி வரை எடுபடவில்லை.

   சற்று தள்ளியிருந்தவாறே தன் மீது அடிவிழாமல் பார்த்துக் கொண்ட நிகோலா, மேரி கோம் மீது அதிரடி தாக்குதல்களை தொடுத்தார். இதனால் முதல் சுற்றில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிகோலா, 2-வது சுற்றின் முடிவில் 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

   மூன்றாவது சுற்றை நிகோலா 3-2 என்ற கணக்கில் கைப்பற்ற அவர் 8-4 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையை எட்டினார்.

   இதனால் அவரின் வெற்றி உறுதியானது. கடைசி சுற்றும் நிகோலா வசமாகவே, இறுதியில் அவர் 11-6 என்ற கணக்கில் வெற்றி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

   இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில் மேரி கோமும், ஆடவர் பிரிவில் விஜேந்தர் சிங் உள்ளிட்ட 7 பேரும் பங்கேற்றனர். இவர்களில் தேவேந்திரோ சிங் தவிர அனைவரும், அரையிறுதிக்கு முன்னதாகவே வெளியேறிவிட்ட நிலையில், மேரி கோம் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.

   இதன்மூலம் குத்துச்சண்டை யில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான மேரி கோம், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai