சுடச்சுட

  
  spt7

   புது தில்லி, ஆக.8: ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திரும்பிய விஜய் குமாருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

   லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற விஜய் குமார், புதன்கிழமை காலையில் தில்லி வந்தார்.

   தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய விஜய் குமாரை அவரது பெற்றோர், உறவினர், ராணுவ அதிகாரிகள் என ஏராளமானோர் திரண்டிருந்து மாலை அணிவித்து வரவேற்றனர். மேள தாளம் முழங்க விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட விஜய் குமார், அங்கிருந்து ராணுவ தலைமையகத்துக்கு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் சென்றார்.

   பின்னர் விஜய் குமார் கூறியது:

   2006, 2010 காமன்வெல்த் போட்டி மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். அதனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். பதக்கம் வென்றதன் மூலம் நிறைய பரிசு அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

   இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஐஏஎஸ் அந்தஸ்திலான பதவி வழங்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கனும் தெரிவித்துள்ளார். ஆனால் நான் ராணுவத்தில் இருந்து அத்தகைய பதவி உயர்வை எதிர்பார்க்கிறேன். இப்போதைய நிலையில் சில காலம் ஓய்வெடுத்துவிட்டு, 2016 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதற்கான பணியைத் தொடங்குவேன் என்றார்.

   தேசிய துப்பாக்கி சுடுதல் சங்க ஆலோசகர் பல்ஜீத் கூறுகையில், "ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு என்னென்ன சலுகைகள் உண்டோ, அவை அனைத்தையும் விஜய் குமார் பெறுவார். விஜய் குமாரை பிரதமரிடம் அழைத்துச் செல்வோம். அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

   ராணுவத்தில் சுபேதாராக இருக்கும் விஜய் குமார், தனக்கு பதவி உயர்வு வழங்காவிட்டால் ராணுவத்திலிருந்து வெளியேறிவிடுவேன் என்று இரண்டு தினங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai