சுடச்சுட

  

  இந்திய அணி இன்று அறிவிப்பு: அணிக்குத் திரும்புகிறார் சச்சின்

  Published on : 26th September 2012 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  1spt8

  மும்பை, ஆக.9: நியூஸிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுகிறது.

   சமீபத்தில் எம்.பி.யான சச்சின் டெண்டுல்கர் 2 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று தெரிகிறது.

   லட்சுமண்: அதேநேரத்தில் ஆஸ்திரேலியத் தொடரில் சரியாக விளையாடாத மூத்த வீரரான வி.வி.எஸ்.லட்சுமண் அணியில் இடம்பெறுவாரா, இல்லை கழற்றிவிடப்படுவாரா என்பதே இப்போது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

   லட்சுமண் தேர்வைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சிறந்த இளம் வீரரை அடையாளம் காண வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் ஒரு தரப்பு கருதுகிறது. அதேநேரத்தில் அவருக்கு கடைசியாக ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பு கூறியுள்ளது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

   ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 153 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த நிலையில் அவருடைய உடற்தகுதி மற்றும் விக்கெட்டுக்கு இடையே ரன் எடுக்க ஓடுதல் உள்ளிட்டவற்றையும் தேர்வுக்குழு கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

   ஏற்கெனவே மிடில் ஆர்டரில் ஜாம்பவான் பேட்ஸ்மேனான திராவிட் இல்லாத நிலையில், இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடி ரன் குவித்தவரும், அனுபமிக்க பேட்ஸýமேனுமான லட்சுமணை நீக்குவது சிக்கலாகிவிடும். இதனால் இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தேர்வுக்குழு கருதுகிறது.

   புஜாராவுக்கு வாய்ப்பு: இதேபோல் இந்திய "ஏ' அணியின் கேப்டனான சேதேஷ்வர் புஜாரா இடம்பெறவும் அதிகவாய்ப்புள்ளது. சோதனை அடிப்படையில் மூன்றாவது வீரராக அவர் களமிறக்கப்படலாம் என்று தெரிகிறது. திராவிட் இடத்துக்கு புஜாரா சரியான பேட்ஸ்மேனாக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

   புஜாரா 2010-ம் ஆண்டில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 72 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். அதனால் புஜாராவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

   இளம் வீரரான அஜிங்க்யா ரஹானே, மாற்று தொடக்க வீரராக அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. சேவாக், கம்பீர், கோலி, தோனி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

   பந்துவீச்சில் ஜாகீர்கான், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெறுவார்கள். இதேபோல் காயத்தில் இருந்து மீண்டுவிட்ட இஷாந்த் சர்மாவின் பெயரும் பரிசீலிக்கப்படலாம். இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடிய இர்ஃபான் பதானும் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

   சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோர் இடம்பெறுவார்கள். மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவே. 15-வது இடத்துக்கு ரோஹித் சர்மா, ரெய்னா, மனோஜ் திவாரி ஆகியோரிடையே போட்டி நிலவலாம் என்று தெரிகிறது.

   சேவாக், ஜாகீர்கான் காயமடைந்திருந்தாலும், இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் அவர்கள் இருவரும் குணமடைந்துவிடுவார்கள் என்று தெரிகிறது.

   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி கண்ட இந்திய அணி, இப்போது நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. திராவிட் இல்லாத நிலையில் களமிறங்கும் இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும்.

   முதல் டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ஹைதராபாதில் தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 31-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

   

   உலகக் கோப்பை அணி

   ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடி டெஸ்ட் தொடருக்கான அணியை மட்டுமின்றி, இலங்கையில் நடைபெறஉள்ள இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இறுதி அணியையும் தேர்வு செய்கின்றனர்.

   உலகக் கோப்பை அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். கிரிக்கெட் அகாதெமி அளிக்கும் உடற்தகுதி சான்றிதழைப் பொறுத்தே யுவராஜ், அணியில் இடம்பெறுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai