சுடச்சுட

  
  1spt3

  லண்டன், ஆக.9: ஒலிம்பிக் மகளிர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை சஹானா குமாரி தகுதிச்சுற்றோடு வெளியேறினார்.

   வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் மொத்தம் 35 பேர் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீராங்கனையான சஹானா குமாரி, முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 1.80 மீ. உயர இலக்கை முதல் வாய்ப்பிலேயே தாண்டினார்.

   இதன்பிறகு 1.85 மீ உயரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் மூன்று வாய்ப்புகளையும் பயன்படுத்தியபோதும் சஹானாவால் தாண்ட முடியவில்லை. இதனால் தகுதிச் சுற்றோடு வெளியேறினார் சஹானா.

   பெங்களூரைச் சேர்ந்தவரான சஹானா, கடந்த ஜூன் 23-ம் தேதி ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய சீனியர் தட கள சாம்பியன்ஷிப் போட்டியில் 1.92 மீ. உயரம் தாண்டி சாதனை படைத்தார். ஆனால் ஒலிம்பிக் போட்டியில் 1.85 மீ. உயரத்தைத் தாண்ட முடியாமல் அவர் ஏமாற்றமடைந்தார்.

   இதனால் சஹானா தான் இடம்பெற்றிருந்த "பி' பிரிவில் 15-வது இடத்தையே பிடித்தார். மொத்தம் 35 பேர் பங்கேற்ற இப் போட்டியில் ஒட்டு மொத்தத்தில் (ஏ, பி என இரு பிரிவுளையும் சேர்த்து) 29-வது இடத்தைப் பிடித்தார் சஹானா.

   இந்த தகுதிச்சுற்றில் "பி' பிரிவில் இடம்பெற்றிருந்த உஸ்பெகிஸ்தானின் ஸ்வெட்லானா 1.96 மீ. உயரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். பெல்ஜியத்தின் டியா ஹீலே, அமெரிக்காவின் சாண்டி லோவே, ரஷியாவின் ஸ்வெட்லானா ஸ்கோலினா, இரானியா கோர்டீவா, அன்னா சிசெரோவா, ஸ்பெயினின் ரூத் பெய்டியா, ஸ்வீடனின் இம்மா கிரீன் டிரிகாரோ, பிரான்ஸின் மெலானியே மெல்போர்ட், துருக்கியின் பர்சூ அஹான், அமெரிக்காவின் பிரிகெட்டா பேரட், லிதுவேனியாவின் அய்ரின் பால்சைட் ஆகியோர் 1.93 மீ. உயரம் தாண்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர். இறுதிச்சுற்று வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai