சுடச்சுட

  
  spt

  மும்பை, ஆக.10: இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான 2 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

   புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள யுவராஜ் சிங், மோசமான பார்ம் காரணமாக நீண்ட நாள்களாக கழற்றிவிடப்பட்டிருந்த ஹர்பஜன் சிங், தமிழக வேகப்பந்து வீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

   பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாதெமி அளித்த உடற்தகுதி சான்றிதழின் அடிப்படையில் யுவராஜ் சிங், அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

   யுவராஜ் சிங் தனது உடற்தகுதியை நிரூபிக்கவும், மீண்டும் பார்முக்கு திரும்பவும் நியூஸிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டி நல்ல வாய்ப்பாக அமையும். 9 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

   யுவராஜ் சிங் தேர்வு விஷயத்தில் தேர்வுக்குழுவினரில் ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்து இருந்தபோதிலும், அவரின் அனுபவம், அதிரடி போன்றவற்றைக் கருத்தில் கொண்டே சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

   ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார் ஹர்பஜன் சிங். அனுபவத்தைக் கருத்தில் கொண்டே அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

   யாருமே எதிர்பார்க்காத வகையில் பியூஷ் சாவ்லாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரரான எல். பாலாஜி 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகீர்கான், இர்ஃபான் பதான், அசோக் திண்டா ஆகியோர் கவனிக்கவுள்ளனர்.

   இப்போதைய அணியில் இடம்பெற்றுள்ள தோனி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், இர்ஃபான் பதான், ரோஹித் சர்மா, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் ஆகியோர் 2007-ல் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் இருபது ஓவர் ஆட்டம் செப்டம்பர் 8-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2-வது இருபது ஓவர் ஆட்டம் செப்டம்பர் 11-ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி செப்டம்பர் 18-ம் தேதி இலங்கையில் தொடங்குகிறது.

   அணி விவரம்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கெüதம் கம்பீர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி, ரோஹித் சர்மா, இர்ஃபான் பதான், அஸ்வின், ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி, பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், அசோக் திண்டா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai