சுடச்சுட

  
  sptc

  லண்டன், ஆக.12: லண்டன் ஒலிம்பிக்கில் 66 கிலோ ப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் சுஷில் குமார் வெள்ளி வென்றார்.

   29 வயதாகும் சுஷில் குமார் கிராமத்துப் பின்னணியில் வளர்ந்தவர். அவரது தந்தை தில்லியில் அரசு பஸ் டிரைவராக உள்ளார்.

   14-வயதில் மல்யுத்த பயிற்சி பெற்ற அவர், இப்போட்டிக்கு போதுமான ஆதரவு இல்லாத சூழ்நிலையிலும் தனது விடா முயற்சியாலும், அபார திறமையாலும் தேசிய, சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி இப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

   உடல் நலம் பாதிப்பு

   "அரையிறுதிச் சுற்றில் சுஷில் குமாருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. எனினும் அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படவில்லை. அரையிறுதி சுற்று முடிந்த பின்னர் சுஷில் குமாருக்கு வாந்தி ஏற்பட்டது. சாப்பிட்ட உணவு அவருக்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதே போல இறுதிச் சுற்று முடிந்த பின்னர் அவருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது' என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயலாளர் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

   அதிக பதக்கங்கள்

   சுஷில் குமாரின் இந்த வெற்றி மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்களின் எண்ணிக்கையும் இதுதான். இதற்கு முன்பு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா 3 பதக்கங்களை வென்றதே சாதனையாக இருந்தது.

   மல்யுத்தத்தில்...

   ஒட்டுமொத்தமாக ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 4 பதக்கம் இது. கே.டி.ஜாதவ் (1952), சுஷில் குமார் (2008), யோகேஷ்வர் தத் (2012) ஆகியோர் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றுள்ளனர்.

   

  பரிசும், பாராட்டும் குவிகிறது

  வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள சுஷில் குமாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பரிசும் பாராட்டும் குவிந்து வருகிறது.

   ஹரியாணா மாநில அரசு சார்பில் அவருக்கு ரூ.1.5 கோடி வழங்கப்படுமென்று அந்த மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா அறிவித்துள்ளார். தில்லி முதல்வர் ஷீலா திட்சித் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படுமென்று கூறியுள்ளார்.

   இது தவிர ரயில்வே சார்பில் ரூ.75 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பயிற்சியாளர் சத்பால் சிங்குக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படுமென்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

   "ரயில்வேயில் பணியாற்றும் சுஷில் குமார் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது எங்கள் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ரயில்வேயில் பணியாற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அமைச்சகம் தொடர்ந்து ஊக்கமளிக்கும்' என்று ரயில்வே அமைச்சர் முகுல் ராய் கூறியுள்ளார்.

   

   பிரதமர் வாழ்த்து

   "சுஷில் குமாரின் திறமையால் நமது தேசமே பெருமையடைந்துள்ளது. மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பயிற்சி மேற்கொண்ட அவர், தனது தனித்திறமை, மனவலிமையால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்' என்று பிரதமர் மன்மோகன் சிங் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai