சுடச்சுட

  

  புது தில்லி, ஆக.14: ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலப் பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், மேரி கோம் ஆகியோர் திங்கள்கிழமை நள்ளிரவு நாடு திரும்பியபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக சேர்க்கப்பட்ட மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்ற மேரி கோம், தனது கணவர் ஆன்லர் கோம், தாயார் மாங்கே அகாம் கோம் ஆகியோருடன் தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர்களின் வருகைக்காக காத்திருந்த நூற்றுக் கணக்கான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். மேலும் மாலை மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்டார்.

  அதே விமானத்தில் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற சுஷில் குமார், வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத் ஆகியோரும் தில்லி வந்தடைந்தனர். அப்போது மாலை, பூங்கொத்து, இனிப்பு வகைகளுடன் காத்திருந்த ரசிகர்கள், அவர்களுக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளித்தனர். மேலும் சுஷில், யோகேஷ்வர் இருவரையும் தங்களின் தோளில் தூக்கி வைத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

  இதன்பிறகு சுஷில் குமார் திறந்த வாகனத்தில் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்தில் கூடியிருந்த ரசிகர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீஸôர் மிகவும் சிரமப்பட்டனர்.

  வீரர்களை வரவேற்க இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகளும் விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அனைவரையும் கெüரவிக்கும் வகையில் வரும் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக சாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.  தங்கம் வெல்ல முடியவில்லையே: மேரி கோம் வருத்தம்  தில்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகிறார் மேரி கோம்.

  ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமளிப்பதாக மேரி கோம் தெரிவித்தார்.

  இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் முதல் பதக்கம் வென்ற இந்தியர் என்பதில் மகிழ்ச்சிதான். ஆனால் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

  அரையிறுதியில் விளையாடியபோது என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை. நான் நினைத்ததைப் போன்று எனது உடல் செயல்படவில்லை. அதனால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நான் மிகவும் குழப்பமடைந்தேன். போட்டிக்கு முன்பு ஒருபோதும் நான் எதற்காகவும் அஞ்சியதில்லை. இருப்பினும் அரையிறுதிப் போட்டியின்போது என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அதை சொல்லக்கூட எனக்குத் தெரியவில்லை.

  2016-ல் பிரேசிலில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி வரை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளேன். ஆனால் அதற்கு எனது உடல் ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை. எனது உடற்தகுதி சரியாக இருக்குமானால் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என்றார்.

  "வாழ்நாள் முழுவதும் இலவச விமானப் பயணம்'

  புது தில்லி, ஆக.14: லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகள் வாழ்நாள் முழுவதும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர்களுடன் இணைவதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெருமை கொள்கிறது. பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது.

  இதன்மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற விஜய் குமார் (துப்பாக்கி சுடுதல்), சுஷில் குமார் (மல்யுத்தம்), வெண்கலம் வென்ற சாய்னா, மேரி கோம், யோகேஷ்வர் தத், ககன் நரங் ஆகியோர் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இலவச பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

  விழாக்கோலமான யோகேஷ்வரின் கிராமம்  யோகேஷ்வருக்கு திலகமிட்டு வரவேற்கும் அவரது தாய்.

  சண்டீகர், ஆக.14: ஒலிம்பிக் நாயகன் யோகேஷ்வருக்கு அவருடைய சொந்த கிராமத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

  ஹரியாணா மாநிலத்தின் சோன்பட் மாவட்டத்தில் உள்ள பானிஸ்வால் கெலன் கிராமம்தான் யோகேஷ்வர் தத்தின் சொந்த ஊர். குக்கிராமமான இங்கு இரவில் வெகு சீக்கிரமாகவே மக்கள் தூங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட மக்கள், யோகேஷ்வரின் வருகை அறிந்து இரவு முழுவதும் தூங்காமல் அவருக்காகக் காத்திருந்தனர்.

  செவ்வாய்க்கிழமை அதிகாலையில் யோகேஷ்வர் தனது சொந்த கிராமத்தின் எல்லையை அடைந்தபோது, அங்கிருந்த மக்கள் அவர் மீது மலர்களை தூவி பிரமாண்டமான முறையில் வரவேற்றனர். வாணவேடிக்கை, பாரம்பரிய நடனம் போன்றவற்றால் அந்த கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

  அவர் வீட்டை வந்தடைந்தபோது அவருடைய தாயார் திலகமிட்டு வரவேற்றார். இனிப்புகள் வழங்கி யோகேஷ்வரின் வெற்றி கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்த தனது தந்தையின் புகைப்படம் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் யோகேஷ்வர்.

  லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு வரை வெளி உலகால் அறியப்படாத இந்த குக்கிராமம், யோகேஷ்வரின் வெற்றியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai