சுடச்சுட

  
  15spt3

  லண்டன் ஒலிம்பிக் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. வழக்கம்போல் அமெரிக்கா 104 பதக்கங்களுடன் முதலிடத்தையும், சீனா 88 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், போட்டியை நடத்திய பிரிட்டன் 65 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

  ஆனால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட கரீபியன் தீவுகளில் உள்ள கிரெனடா என்ற நாடு ஒரு தங்கப் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் 50-வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளது. ஆனால் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவுக்கோ ஒரு தங்கப் பதக்கம்கூட கிடைக்கவில்லை. 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே இந்தியாவுக்கு கிடைத்தன. பதக்கப் பட்டியலில் 55-வது இடமே கிடைத்தது.

  மற்ற ஒலிம்பிக் போட்டிகளோடு ஒப்பிடும்போது இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாகவே அமைந்துள்ளது. ஆனாலும் மனித ஆற்றலை பலமாகக் கொண்ட இந்தியாவுக்கு இது ஏற்கத்தக்கதல்ல.

  கிரெனடாவின் மக்கள் தொகை, நமது ஊரில் உள்ள நகராட்சியில் வசிக்கும் மக்கள் தொகைக்கு நிகரானது மட்டுமே. அந்த குட்டி நாடுகூட தங்கத்தை வென்றுவிட்ட நிலையில், இந்தியா தங்கப் பதக்கமே வெல்லாமல் திரும்பியிருப்பது வேதனைக்குரிய விஷயமே.

  உலகின் வல்லரசான அமெரிக்காவையே ஒலிம்பிக் தட களத்தில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது ஜமைக்கா. ஜமைக்காவின் மக்கள் தொகை 27 லட்சம்தான். இது சென்னை நகரில் வசிக்கும் மக்கள் தொகையில் பாதிதான். ஆசியக் கண்டத்தில் உள்ள சிறிய நாடான தென் கொரியாகூட 28 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்தது. 99 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட ஹங்கேரி வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 17. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் எத்தியோப்பியா, உகான்டா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள்கூட பதக்கப் பட்டியலில் இந்தியாவை முந்தின. உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள்கூட ஒலிம்பிக்கில் ஜொலித்தன.

  மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவால் ஒலிம்பிக்கில் ஏன் ஜொலிக்க முடியவில்லை? இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், ஒன்றல்ல, இரண்டல்ல, பல காரணங்கள் இருக்கின்றன.

  விளையாட்டுக்கென்று குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள்கூட இன்றைக்கு இல்லை. இந்த சூழலில் வீரர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்.

  விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகளில் பெரும்பாலானோர், சலுகைகளை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் திறமையானவர்கள் வாய்ப்பை இழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

  பல சங்கங்களில் அதன் நிர்வாகிகளிடையே ஏற்படும் பிரச்னையால் வீரர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, இந்த முறை கடைசி இடத்தைப் பிடித்ததற்கு இந்தியாவில் ஹாக்கியை நிர்வகிக்க இரு சங்கங்களிடையே போட்டி நிலவுவதும் ஒரு காரணம். காலணி அணியாமலேயே விளையாடி தங்கப் பதக்கம் வென்று தந்தவர்கள் முன்னாள் ஹாக்கி ஜாம்பவான்கள். அப்படிப்பட்ட ஹாக்கி விளையாட்டுக்கு இப்போது தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார்கள் சில சுயநலவாதிகள்.

  டென்னிஸ் போட்டியில் இந்த முறை இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புகள் இருந்தபோதிலும், வீரர்களிடையிலான பிரச்னையைத் தீர்க்க டென்னிஸ் சங்கம் தவறியதால் பதக்கத்தை கோட்டைவிட நேர்ந்தது. வீரர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய டென்னிஸ் சங்கம், அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது, அதன் கையாலாகாததனத்தையே காட்டுவதாக அமைந்தது.

  இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டை எடுத்துக் கொண்டால் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, போபண்ணா, சானியா மிர்சாவைத் தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. இவர்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கத் தவறிவிட்டது டென்னிஸ் சங்கம். அதனாலேயே பயஸ், பூபதியின் மிரட்டலுக்கு அடிபணிந்தது. ஒருவேளை அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கியிருந்தால், பயஸýம், பூபதியும் டென்னிஸ் சங்கத்தை மிரட்டியிருப்பார்களா? இல்லை டென்னிஸ் சங்கம்தான் அவர்களை தாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்குமா?

  ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சாதிக்கவில்லையே என்பதில் ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்பட்ட வருத்தம்கூட, விளையாட்டு சங்க நிர்வாகிகளுக்கு இல்லை என்பதுதான் உண்மை. இப்படிப்பட்டவர்கள் விளையாட்டை மேம்படுத்துவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

  இதுவரையிலான ஒலிம்பிக் போட்டியில் நாம் என்ன சாதித்தோம் என்பதைவிட, வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சாதிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய தருணமிது.

  முதலில் விளையாட்டு சங்கங்களில் இருக்கின்ற கறைபடிந்தவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். புதியவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அவர்கள் சிறப்பாக செயல்படும் வகையில் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையாதபட்சத்தில் நீக்கப்பட வேண்டும். விளையாட்டு சங்கங்களை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வராத வரையில் விளையாட்டில் நாம் எவ்வித முன்னேற்றத்தையோ, மாற்றத்தையோ காண முடியாது.

  அடுத்ததாக மைதானங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவசியமானது. போதுமான வசதிகள் இல்லாததால் ஒரே குத்துச்சண்டை மேடையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி மேற்கொள்கிறார்கள். அதைப் பார்க்கும்போது இனிப்பின் மீது ஈக்கள் மொய்ப்பது போன்ற ஓர் எண்ணம்தான் மனதில் தோன்றுகிறது.

  ஒரு கால்பந்து மைதானத்தில் பத்துக்கும் மேற்பட்ட அணிகள் விளையாடுகின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பல வீரர்கள் ஏழ்மை காரணமாக விளையாட்டிலிருந்து விலகிவிடும் சூழல் இன்றும் தொடர்கிறது. எனவே அவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

  2016-ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அணி இப்போதே தேர்வு செய்யப்பட வேண்டும். எல்லா விளையாட்டுகளுக்கும் அணிகளை அனுப்புவதைவிட, எந்த விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு விளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக், ஆசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான ரூபாயை பரிசளிக்கின்றன. அதேநேரத்தில் வளர்ந்து வரும் இளம் வீரர்களை பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை. இதனால் திறமையும், ஆர்வமும் இருந்தபோதிலும்கூட பல வீரர்கள் பாதை மாறி செல்கின்றனர். எனவே இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பது அவசியம். இதுபோன்ற சூழல்களை ஏற்படுத்தினால் மட்டும்தான் பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற முடியும்.

  நம் நாட்டின் தெருக்களிலும், மூலை முடுக்குகளிலும் பல உசேன் போல்ட்டுகளும், மைக்கேல் பெல்ப்ஸýகளும் ஒளிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் இன்றும் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் கண்காணாத இடத்தில் இருக்கிறோம். அவர்களை அடையாளம் கண்டு சரியான முறையில் தயார்படுத்துவது முக்கியமானது. இதையெல்லாம் செய்யாமல் கோடிக்கணக்கான ரூபாயை செலவிடுவதால் மட்டும் எவ்வித பயனோ, பலனோ இல்லை. எனவே விளையாட்டுத் துறையில் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தாத வரையில் இந்திய வீரர்களின் செயல்பாட்டில் மாற்றத்தையோ, முன்னேற்றத்தையோ காண முடியாது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai