சுடச்சுட

    
    18spt5

    புது தில்லி, ஆக.17: நியூஸிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரோடு இந்தியாவின் வி.வி.எஸ். லட்சுமண் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

    இன்னும் ஓரிரு நாள்களில் லட்சுமண் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும், அப்போது இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

    இதன்மூலம் வி.வி.எஸ். லட்சுமணின் 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளது. சச்சின், ராகுல் திராவிட், செüரவ் கங்குலி ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு பல போட்டிகளில் லட்சுமண் வெற்றி தேடித்தந்துள்ளார். தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்ததில் இவரின் பங்களிப்பு அளப்பரியது.

    37 வயதாகும் லட்சுமண் இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 17 சதம் உள்பட 8,781 ரன்கள் குவித்துள்ளார். 2000-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி "பாலோ-ஆன்' ஆனபோது, 281 ரன்கள் குவித்து வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தார். இந்த வெற்றிக்குப் பிறகு "வெரி வெரி ஸ்பெஷல் லட்சுமண்' என்றே அழைக்கப்பட்டார்.

    ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடாதபோதிலும், இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 2,338 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும். 16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினாலும், இந்தக் காலக்கட்டங்களில் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்றில்கூட அவர் விளையாடியதில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய லட்சுமண், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ரன் குவிக்கத் தவறினார். இதுவே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டது.

    அவருடைய சமகாலத்தில் விளையாடியவர்களில் அனில் கும்ப்ளே, செüரவ் கங்குலி, திராவிட் ஆகியோர் ஏற்கெனவே ஓய்வுபெற்றுவிட்டனர். சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai