சுடச்சுட

  
  spt2

  ஹைதராபாத், ஆக.18: இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான வி.வி.எஸ். லட்சுமண் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வுபெறுவதாக சனிக்கிழமை அறிவித்தார்.

  சக வீரர்களால் "வெரி வெரி ஸ்பெஷல்' லட்சுமண் என்றழைக்கப்பட்டாலும், வங்கிபுறப்பு வெங்கடசாய் லட்சுமண் என்பதே அவருடைய முழுப்பெயர். அதையே சுருக்கி வி.வி.எஸ். லட்சுமண் என்றழைக்கப்பட்டார்.

  நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கும் வகையில் முன்னதாகவே ஓய்வுபெற்றுவிட்டார் லட்சுமண்.

  இதன்மூலம் 37 வயதாகும் லட்சுமணின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருப்பினும் உள்ளூர் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார். தனது உள் மனதைக் கேட்டே ஓய்வு முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

  ஓய்வு குறித்து அவர் மேலும் கூறியது: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். அதற்கு இதுதான் சரியான தருணம் என நினைக்கிறேன். ஓய்வு முடிவு கடினமானதுதான். எப்போதுமே நான் எனது மனசாட்சியை கேட்பவன். மனசாட்சி என்பது முன்னறிந்து சொல்லக்கூடியது.

  எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அதைக் கேட்டே செயல்பட்டிருக்கிறேன். கடந்த 4 நாள்களாக எனக்குள் நிறைய சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. இருப்பினும் ஓய்வுபெற இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்துவிட்டேன். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க இதுதான் சரியான தருணம் என்று கருதுகிறேன்.

  வெள்ளிக்கிழமை இரவு என் மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை. இறுதியில் எனது உள் மனதை கேட்டு ஓய்வுபெறும் முடிவுக்கு வந்தேன். இதையடுத்து சனிக்கிழமை காலையில் இந்தத் தகவலை அணியின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்திடம் தெரிவித்தேன். இதேபோல் சகவீரர்களிடமும் இந்த விஷயத்தை தெரிவித்தேன். நியூஸிலாந்து தொடருக்கு முன்னதாகவே ஓய்வு பெறுவது குறித்து அவர்கள் அனைவருமே ஆச்சர்யம் தெரிவித்தனர்.

  பிசிசிஐ தலைவர் சீனிவாசனிடம் தெரிவித்தபோது, அவர் தயக்கத்தோடே எனது முடிவை ஏற்றுக் கொண்டார். இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது எனது சிறு வயது கனவு. அந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்திய அணி, சொந்த மண்ணிலும், அன்னிய மண்ணிலும் வெற்றிகளைக் குவித்த காலத்தில் விளையாடியது என்னுடைய அதிர்ஷ்டம். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் என்னை வழிநடத்திய மற்றும் ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி "பாலோ ஆன்' ஆனது. அப்போது 281 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்ததை நினைவுகூர்ந்த அவர், "வரலாற்றுச் சாதனை மிக்க வெற்றியைப் பெற்ற அணியில் நாமும் இடம்பெற்றிருந்தது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைத்துக் கொள்வேன். அந்தப் போட்டியின் முடிவை எப்படி மாற்றினோம் என்று நினைத்துப் பார்ப்பது உணர்ச்சிமயமானது.

  முன்னணி வீரர்களின் மனதில் ஓய்வு எண்ணம் தோன்றும்போது, ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளாகவே நானும் அதை உணர ஆரம்பித்துவிட்டேன். எப்போதுமே உள் மனசாட்சியைக் கேட்டே முடிவெடுப்பேன். அதனாலேயே என்னுடைய 17-வது வயதில் மருத்துவப் படிப்புக்கு போகாமல் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன்.

  எப்போதுமே என்னுடைய கண்ணியத்தை காப்பாற்றுவதோடு, அணிக்கும் சிறந்த பங்களிப்பை கொடுக்கவே முயற்சித்தேன். சில நேரங்களில் நான் சரியாக விளையாடவில்லை என்றால், பெரும் ஏமாற்றமடைவேன். இந்த கிரிக்கெட் வாழ்க்கை உணர்ச்சிபூர்வமான, மறக்க முடியாத பயணம். என் வாழ்நாள் முழுவதும் இந்த நினைவுகளில் திளைத்திருப்பேன் என்றார்.

  இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியத் தொடர்களில் ரன் குவிக்கத் தவறியது குறித்துப் பேசிய லட்சுமண், "அப்போது சிலர் என்னை விமர்சித்தார்கள். ஆனால் அதைவிட அதிக அளவில் நலம் விரும்பிகள் இருந்தார்கள். ஆனால் எல்லா மனிதர்களையும் திருப்திப்படுத்த முடியாது. வெற்றியும், தோல்வியும் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி.

  என்னுடைய காலத்தில் விளையாடிய வீரர்களில் பெரும்பாலானோர் ஜாம்பவான்கள். அவர்களுடன் நட்போடு இருந்த நினைவுகள் வாழ்க்கை முழுவதும் என்னோடு இருக்கும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லை. இருப்பினும் ஹைதராபாத் அணி வீரர்களுடன் என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்வதே இப்போதைய இலக்கு. நான் ஹைதராபாத் அணிக்காக விளையாடியபோது மூத்த வீரர்கள் என்னுடன் அவர்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். அதேபோல் நானும் செயல்படுவேன்' என்றார்.

  8,781 ரன்கள்

  இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 17 சதம் உள்பட 8,781 ரன்கள் குவித்துள்ளார்.

  ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடாதபோதிலும், இதுவரை 83 போட்டிகளில் விளையாடி 2,338 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும்.

  16 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினாலும், இந்தக் காலக்கட்டங்களில் நடைபெற்ற 4 உலகக் கோப்பை போட்டிகளில் ஒன்றில்கூட அவர் விளையாடியதில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai