சுடச்சுட

    
    spt2

    இந்திய கிரிக்கெட் அணியின் மகத்தான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான வி.வி.எஸ்.லட்சுமணின் 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

    கிரிக்கெட்டில் பொறுமையின் சிகரம் என்று கருதப்பட்ட லட்சுமணின் ஓய்வு முடிவு சற்று அதிரடியாகவே அமைந்துவிட்டது. நியூஸிலாந்து டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு லட்சுமணின் அதிரடி அறிவிப்பு பேரதிர்ச்சியாய் அமைந்தது.

    விவிஎஸ் (வங்கிப்புறப்பு வெங்கடசாய்) லட்சுமண், தனது தனித்துவம் மிக்க ஆட்டத்தால் சக வீரர்களால் "வெரி வெரி ஸ்பெஷல்' லட்சுமண் என்றே அழைக்கப்பட்டார். விளையாட்டிலும் சரி, விளையாட்டுக்கு வெளியிலும் சரி "வெரி வெரி ஸ்பெஷல்' லட்சுமண் என்று தன்னை நிரூபித்தவர்.

    மருத்துவ தம்பதிகளின் மகனான லட்சுமணுக்கு பள்ளிப் படிப்பை முடித்தபோது, மருத்துவம் படிக்க இடம் கிடைத்தாலும், அதை உதறிவிட்டு கிரிக்கெட்டை தேர்வு செய்து, தனது முடிவு சரியே என்பதை நிரூபித்திருக்கிறார்.

    1996 நவம்பர் 20-ம் தேதிதான் லட்சுமணின் சர்வதேச கிரிக்கெட் பயணம் ஆரம்பமானது. ஆமதாபாதில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்ட லட்சுமண், 2-வது இன்னிங்ஸில் அரை சதமடித்தார்.

    2000-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இருந்துதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார் லட்சுமண். அந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தபோதும், 2-வது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி தனிநபராகப் போராடிய லட்சுமண் 167 ரன்கள் குவித்தார்.

    2001-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர், லட்சுமணின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் "பாலோ-ஆன்' பெற்றபோது இந்திய அணி தோற்றுவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வேளையில் லட்சுமண் 281 ரன்கள் குவித்து தோல்வியின் விளிம்பில் இருந்த இந்திய அணிக்கு உயிர் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

    அவருக்குப் பக்கபலமாக திராவிட் 180 ரன்கள் குவிக்க, இந்தியா 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 657 ரன்கள் குவித்தது. இதுதான் இந்திய அணி ஓர் இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரும்கூட. இறுதியில் அந்த டெஸ்டில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா.

    இதன்மூலம் தொடர்ச்சியாக 16 போட்டிகளில் வெற்றி கண்டு உலக சாதனை படைத்திருந்த ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமையும் லட்சுமணின் வசமானது.

    இதையடுத்து சென்னையில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி. இதிலும் லட்சுமணின் பங்கு (முதல் இன்னிங்ஸில் 65, 2-வது இன்னிங்ஸில் 66) கணிசமாகவே இருந்தது. இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர் வெற்றி கண்டு வந்த ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரையே இழக்க நேரிட்டது.

    இதன்பிறகு குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லட்சுமணின் ஆட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.

    2003-ல் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியிலும் திராவிடுடன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். திராவிட் (233) - லட்சுமணன் (148) ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

    2007-08-ல் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸில் விளையாடி ஒரு சதம், ஓர் அரைசதம் உள்பட 209 ரன்கள் குவித்தார். இதன் சராசரி 209. இதுதான் அவருடைய சிறந்த சராசரி. டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள் வரிசையில் 4-வது இடத்தில் உள்ளார் லட்சுமண். இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதம், 56 அரைசதங்களுடன் 8,781 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் (15,470), திராவிட் (13,288), சுநீல் காவஸ்கர் (10,122) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    வெளிநாட்டு மண்ணில் 5 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த 4 இந்தியர்களில் லட்சுமணும் ஒருவர். சச்சின், திராவிட், காவஸ்கர் ஆகியோர் மற்ற 3 வீரர்கள்.

    2001-ல் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் (59, 281) சேர்த்து மொத்தம் 340 ரன்கள் குவித்தார். ஒரு போட்டியில் இந்திய வீரர் ஒருவர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இது. 1971-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக காவஸ்கர் எடுத்த 344 (124, 220) ரன்களே இன்றளவும் சாதனையாக உள்ளது.

    டெஸ்ட் போட்டியில் 135 கேட்சுகளையும் பிடித்து அதிக கேட்ச் பிடித்த இந்தியர்களின் வரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். முதலிடம் திராவிட் (210 கேட்சுகள்) வசம் உள்ளது.

    பார்ட்னர்ஷிப்பிலும் இவர் சாதனை படைத்துள்ளார். 2004-ல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் சச்சினுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 353 ரன்கள் சேர்த்தார். 2001-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் திராவிடுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன்கள் சேர்த்தார்.

    2010-ல் கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோனியுடன் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தார். தோனியும், லட்சுமணும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த 2-வது இந்தியர் லட்சுமண். 29 டெஸ்ட் போட்டிகளில் 2,434 ரன்கள் குவித்துள்ளார். முதல் வீரர் சச்சின்.

    டெஸ்ட் போட்டி விளையாடிய அளவுக்கு லட்சுமணால் ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்க முடியவில்லை. 83 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 6 சதங்கள் உள்பட 2,338 ரன்கள் குவித்துள்ளார். 1998, ஏப்ரல் 9-ம் தேதி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடங்கிய அவரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கை 2006, டிசம்பர் 3-ல் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியோடு முடிவுக்கு வந்தது. லட்சுமண் விளையாடிய காலத்தில் 4 உலகக் கோப்பைகள் நடைபெற்றாலும், அதில் ஒன்றில்கூட அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் லட்சுமண் ஒருபோதும் சர்ச்சையில் சிக்கியதில்லை. களத்தில் நின்ற நேரங்களில் வாய்ச்சவடால் பேர்வழிகளான ஆஸ்திரேலியர்கள் சீண்டினாலும், அதை பொருட்படுத்தாது அமைதியாக இருந்து பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியவர்.

    2003-04-ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் லட்சுமணை வீழ்த்த முடியாமல் விழிபிதுங்கிய ஆஸ்திரேலியர்கள், "அவருக்கு எப்படி பந்துவீசுவது, அவரை எப்படி வீழ்த்துவது என்று தெரியவில்லை' என புலம்பி தீர்த்தார்கள். "இந்திய அணியில் திராவிட் மிகப்பெரிய பேட்ஸ்மேன், சச்சின் ஜாம்பவான், லட்சுமணோ ஓர் அதிசயம்' என்று முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹிடம் கூறினாராம் பிரெட் லீ.

    ஆஸ்திரேலியர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த லட்சுமணின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. லட்சுமணின் இடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

    மைதானத்தில் எப்போதுமே நிதானமாக செயல்பட்டவர் என்று பெயரெடுத்த லட்சுமண், ஓய்வு விஷயத்தில் மட்டும் அவசரப்பட்டது ஏனோ தெரியவில்லை? நியூஸிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி தாய் நாட்டு மக்கள் முன்னிலையில் பிரியா விடை பெற்றிருக்கலாமே!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai