சுடச்சுட

  
  spt2

  டவுன்ஸ்வில்லே (ஆஸ்திரேலியா), ஆக. 20: 19-வயதுக்குள்பட்டோருக்கான (யு19) உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்த வெற்றி மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

  திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 45.1 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து விளையாடிய இந்தியா 48 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வென்றது.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளாக ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதியில் மோதுவது ஏற்கெனவே முடிவாகிவிட்டது.

  நியூஸிலாந்து அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், அந்த அணியுடன் மோத இருப்பது இந்தியாவா அல்லது பாகிஸ்தானா என்பதை நிர்ணயிக்கும் காலிறுதி ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே டவுன்ஸ்வில்லே நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.

  முதலில் பேட் செய்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. தொடக்க வீரரும், கேப்டனுமான பாபர் ஆஸம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் இஸôன் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களை இந்திய பந்து வீச்சாளர்கள் விரைவிலேயே ஆட்டமிழக்கச் செய்தனர். இதனால் பாகிஸ்தான் 45.1 ஓவர்களில் 136 ரன்களுக்குச் சுருண்டது.

  இந்திய தரப்பில் சந்தீப் சர்மா, ரவிகாந்த் சிங் ஆகியோர் தலா 3 விக்கெட் எடுத்தனர்.

  அடுத்து 137 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய வீரர்களும் தொடக்கம் முதலே தடுமாறினர். 8 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால் அபராஜித், விஜய் சோல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி ஸ்கோர் உயர உதவினர். விஜய் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அபராஜித் 51 ரன்களில் வெளியேறினார். அப்போது இந்திய அணி 36.2 ஓவர்களில் 6 விக்கெட்க்கு 120 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்தியா எளிதில் வெல்லும் என்ற நிலை ஏற்பட்டது.

  ஆனால் அடுத்த 10 ரன்களுக்குள் மேலும் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி கட்டத்தில் ஹர்மீத் சிங் 13 ரன்களும், சந்தீப் சர்மா 2 ரன்களும் எடுத்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

  48 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டிப் பிடித்தது இந்தியா. பாகிஸ்தான் போட்டியில் இருந்து வெளியேறியது.

  51 ரன்கள் எடுத்ததுடன், 1 விக்கெட் வீழ்த்திய அபராஜித் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். வியாழக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா எதிர்கொள்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai