Enable Javscript for better performance
இந்தியா-நியூஸிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

  

  இந்தியா-நியூஸிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

  Published on : 26th September 2012 11:29 AM  |   அ+அ அ-   |    |  

  a3

   ஹைதராபாத், ஆக.22: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

   மிடில் ஆர்டரில் இந்திய அணியின் தூண்களான ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இளம் வீரர்களுடன் களமிறங்குகிறது தோனி தலைமையிலான இந்திய அணி.

   கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி கண்டதோடு, முதலிடத்தையும் இழந்தது இந்திய அணி.

   இதனால் கடும் விமர்சனத்துக்குள்ளான இந்திய அணி, தனது சொந்த மண்ணில் நடைபெறும் இத் தொடரில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்துக்கு மத்தியில் நியூஸிலாந்தைச் சந்திக்கிறது.

   அடுத்ததாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணிக்கு இது முக்கியமான தொடராகும்.

   இளம் வீரர்கள்: திராவிட், லட்சுமண் ஓய்வு பெற்றுவிட்டதால், சேவாக்கும், கம்பீரும் சிறப்பான தொடக்கம் அமைத்துத் தருவது முக்கியமானதாகும். மிடில் ஆர்டரில் சச்சினை மட்டுமே நம்பியுள்ளது இந்திய அணி. இந்தத் தொடரிலும் இந்திய அணிக்கு சச்சின் தோள் கொடுப்பார் என்று திராவிடும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். 100-வது சதத்தை அடித்துவிட்டதால் இந்த டெஸ்ட் போட்டியில் சச்சின் எவ்வித நெருக்கடியுமின்றி விளையாடுவார்.

   இதேபோல் கோலி மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக கோலி கருதப்பட்டாலும், இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 491 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கேப்டன் தோனி தொடர்ந்து மோசமாக விளையாடி வருவது கவலையளிப்பதாக உள்ளது.

   5 மற்றும் 6-வது இடங்களைப் பிடிக்க சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, எஸ்.பத்ரிநாத் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. காயத்திலிருந்து மீண்டுவிட்ட புஜாரா, சமீபத்தில் ஓய்வுபெற்ற திராவிட், லட்சுமண் ஆகியோர் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளார்.

   இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மீண்டும் ஒரு முறை டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ரெய்னா. இது ரெய்னாவுக்கு தனது திறமையை நிரூபிக்க கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

   பந்துவீச்சு: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகீர் கான் கூட்டணி கவனிக்கவுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சு எடுபடும் என்பதால் ஜாகீர் கான் பந்துவீச்சு நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று நம்பலாம்.

   காயத்திலிருந்து மீண்டுள்ள இஷாந்த் சர்மாவின் உடற்தகுதி உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது. உடற்தகுதியைப் பொறுத்தே அவர் அணியில் இடம்பெறுவார். அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோர் சுழற்பந்துவீச்சை கவனிப்பார்கள் என்று தெரிகிறது.

   ஸ்லிப் திசை... திராவிட், லட்சுமண் ஆகியோரின் ஓய்வு பேட்டிங்கில் மட்டுமல்ல, மாறாக ஸ்லிப் திசை பீல்டிங்கிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த இந்தியர்களின் வரிசையில் திராவிட் (210 கேட்ச்) முதலிடத்திலும், லட்சுமண் (135 கேட்ச்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

   இதனால் கடந்த 3 தினங்களாகவே வலைப் பயிற்சியின்போது ஸ்லிப் திசையில் கேட்ச் பிடிப்பதற்கு வீரர்களுக்கு அதிக பயிற்சியளிக்கப்பட்டது.

   நியூஸிலாந்து: கேப்டன் டேனியல் வெட்டோரி காயம் காரணமாக விலகியிருப்பது நியூஸிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த முறை நியூஸிலாந்து அணி இந்தியாவில் விளையாடியபோது அவர்தான் அதிக விக்கெட் (14) எடுத்தார்.

   இருப்பினும் அந்த அணியின் தற்போதைய கேப்டன் ராஸ் டெய்லர், மார்ட்டின் கப்டில், பிரென்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் பிராங்க்ளின், டிம் செüதி, கேன் வில்லியம்சன் உள்ளிட்டோர் இந்திய ஆடுகளங்களைப் பற்றி நன்கறிந்தவர்கள். ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

   2010-ல் நியூஸிலாந்து அணி, இந்தியாவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடியபோது மெக்கல்லம் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். இரட்டைச் சதமும் அடித்தார். இந்தத் தொடரில் அவர் குவித்த 225 ரன்களே டெஸ்ட் போட்டியில் அவரின் அதிகபட்ச ரன்னாகும்.

   ராஸ் டெய்லர் நம்பிக்கை: தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் படுதோல்வி கண்ட நிலையில், நியூஸிலாந்து இப்போது இந்தியாவுக்கு வந்துள்ளது. இருப்பினும், "கடந்த முறை இங்கு சிறப்பாக விளையாடியதைப் போலவே இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

   இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது கடினமானதுதான். இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சு, ரிவர்ஸ்விங் பந்துவீச்சை மிகக் கவனமாக கையாளுவோம்' என்று நியூஸிலாந்து கேப்டன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

   தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய அணிக்கும் சரி, தரவரிசையில் 8-வது இடத்தில் நியூஸிலாந்து அணிக்கும் சரி, தங்களின் தோல்விகளிலிருந்து மீண்டு வருவதற்கான முக்கியத் தொடராக இது அமைந்துள்ளது.

   அணி விவரம்

   இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கெüதம் கம்பீர், வீரேந்திர சேவாக், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், சேதேஷ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஜிங்க்யா ரஹானே, எஸ்.பத்ரிநாத், பியூஷ் சாவ்லா.

   நியூஸிலாந்து: ராஸ் டெய்லர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டக் பிரேஸ்வெல், டேனியல் ஃபிளின், ஜேம்ஸ் பிராங்க்ளின், மார்ட்டின் கப்டில், கிறிஸ் மார்ட்டின், பிரென்டன் மெக்கல்லம், தருண் நேதுலா, ஜீதன் படேல், டிம் செüதி, குரூகெர் வான் விக், நீல் வாக்னெர், பி.ஜே.வாட்லிங், கேன் வில்லியம்சன்.

   

  மைதானம் எப்படி?

   போட்டி நடைபெறவுள்ள ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும், ரிவர்ஸ்விங் பந்துவீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என்று தெரிகிறது. போட்டியின் 2-வது நாளில் இருந்து மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆடுகள பராமரிப்பாளர் கூறியுள்ளார்.

   

  இதுவரை...

   கடந்த 44 ஆண்டுகளில் இவ்விரு அணிகளும் 17 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 9 முறை தொடரைக் கைப்பற்றியுள்ளது. இரண்டு முறை நியூஸிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 1968-ம் ஆண்டு 3-1 என்ற கணக்கிலும், 2009-ல் 1-0 என்ற கணக்கிலும் நியூஸிலாந்து மண்ணில் இந்தியா தொடரை வென்றுள்ளது.

   நியூஸிலாந்து 4 முறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் ஒரு முறைகூட இந்திய மண்ணில் தொடரைக் கைப்பற்றியதில்லை. 4 டெஸ்ட் தொடர்கள் சமநிலையில் முடிந்துள்ளன.

   இவ்விரு அணிகளும் மொத்தம் 50 டெஸ்டுகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 16-லும், நியூஸிலாந்து 9-லும் வெற்றி கண்டுள்ளன. 25 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

   கடைசியாக 2010-ம் ஆண்டு நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் இந்தியா 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.

   

  டிக்கெட் விற்பனை மந்தம்

   ஹைதராபாதில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு வெறும் 2,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

   மொத்தம் 39,000 பேர் அமர்ந்து போட்டியைப் பார்க்கும் வசதி கொண்டது இந்த மைதானம். மண்ணின் மைந்தரான லட்சுமண் ஓய்வுபெற்றதே டிக்கெட் விற்பனை சரிந்ததற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

   இதுதொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில், "இதுவரை 2,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானால் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். லட்சுமண் ஓய்வுபெற்றதே டிக்கெட் விற்பனை வீழ்ச்சியடையக் காரணம்.

   லட்சுமணுக்கு இதுதான் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அதனால் அவரின் ஆட்டத்தைக் காண்பதற்கு அதிக அளவில் ரசிகர்கள் வருவார்கள். மைதானம் நிரம்பும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் போட்டிக்கு முன்னதாகவே லட்சுமண் ஓய்வுபெற்றதால் அது நடக்காமல் போய்விட்டது' என்றனர்.

   போட்டி நேரம்: காலை 9.30 மணி, நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் கிரிக்கெட் எச்.டி.

   

   

   

  kattana sevai