சுடச்சுட

  

  பாலோ-ஆனை தவிர்க்க நியூஸிலாந்து போராட்டம்: 438 ரன்கள் குவித்தது இந்தியா

  Published on : 26th September 2012 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a4

  ஹைதராபாத், ஆக.24: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 134.3 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

   இதன்பிறகு முதல் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. அந்த அணி பாலோ-ஆனை தவிர்க்க இன்னும் 133 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன.

   ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 119, தோனி 29 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

   தோனி அரைசதம்: 2-வது நாளான வெள்ளிக்கிழமை மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 26 நிமிடங்கள் தாமதமாகவே போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து பெüலர்களை புஜாராவும், தோனியும் தொடர்ந்து சோதித்தனர். தோனி 100 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்தார். 68-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தோனிக்கு இது 25-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

   மறுமுனையில் சிறப்பாக ஆடிய புஜாரா, பிரேஸ்வெல் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து 150 ரன்களைக் கடந்தார். இவர்களை வீழ்த்த நியூஸிலாந்து வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும் மதிய உணவு இடைவேளை வரை அது நடக்கவில்லை.

   புஜாரா 159 ரன்கள்: மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் நியூஸிலாந்து பெüலர்களின் கடும் முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஜீதன் படேல் வீசிய பந்தை சிக்ஸருக்கு தூக்கினார் புஜாரா. ஆனால் எல்லைக்கு சற்று முன்னதாக நின்று கொண்டிருந்த பிராங்க்ளின் கையில் பந்து தஞ்சம் புகுந்தது.

   7 மணி நேரம் 48 நிமிடங்கள் களத்தில் நின்ற புஜாரா 306 பந்துகளில் 1 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். புஜாரா-தோனி ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் குவித்தது.

   அஸ்வின் 37 ரன்கள்: இதன்பிறகு இந்திய அணி சரிவுக்குள்ளானது. 147 பந்துகளைச் சந்தித்த கேப்டன் தோனி 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜாகீர்கான் ரன் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். அஸ்வின் 54 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 ரன்களில் ரன் அவுட்டாக இந்தியாவின் இன்னிங்ஸ் 134.3 ஓவர்களில் 438 ரன்களில் முடிவுக்கு வந்தது.

   பிரக்யான் ஓஜா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 51 ரன்களுக்கு இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

   நியூஸிலாந்து தரப்பில் ஜீதன் படேல் 4 விக்கெட்டுகளையும், பெüல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

   பீல்டிங் மோசம்: முதல் நாள் ஆட்டத்தைப் போலவே 2-வது நாள் ஆட்டத்திலும் நியூஸிலாந்து வீரர்கள் பீல்டிங்கில் சொதப்பினர். சில நல்ல கேட்சுகளை அவர்கள் கோட்டைவிட்டதால் தோனியும், புஜாராவும் ஆட்டமிழப்பதிலிருந்து தப்பினர்.

   சரிவுக்குள்ளான நியூஸிலாந்து: இதன்பிறகு முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணியில் மெக்கல்லம் சற்று வேகமாகவே ஆடினார். ஆனாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 27 பந்துகளைச் சந்தித்த மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஓஜா பந்துவீச்சில் ஸ்லிப் திசையில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் மெக்கல்லம்.

   இதன்பிறகு ஓஜாவும், அஸ்வினும் இணைந்து நியூஸிலாந்து அணியை நிலைகுலையச் செய்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கப்டில் 2 ரன்களில் வீழ்ந்தார். இந்த விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் ராஸ் டெய்லர் 2 ரன்களிலும், ஃபிளின் 16 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது நியூஸிலாந்து.

   இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சனும், பிராங்க்ளினும் அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாகப் போராடினர். 2-வது நாள் ஆட்டம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், இந்த ஜோடியைப் பிரித்தார் ஓஜா. 92 பந்துகளைச் சந்தித்த கேன் வில்லியம்சன் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

   2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. பிராங்க்ளின் 31 ரன்களுடனும், வான் விக் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

   இந்தியத் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஓஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 3-வது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

   இந்தியாவின் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து அணி இன்னும் 332 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 5 விக்கெட்டுகளே உள்ளன. மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் நியூஸிலாந்து அணி பாலோ-ஆன் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

   சூப்பர் ஸ்லிப்: திராவிட்-லட்சுமண் இல்லாத குறையை பேட்டிங்கில் புஜாராவும், கோலியும் போக்கினார்கள். அதேபோல் ஸ்லிப் திசையில் அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை கோலி நிரப்பினார். முதல் ஸ்லிப்பில் சேவாக்கும், 2-வது ஸ்லிப்பில் ரெய்னாவும், 3-வது ஸ்லிப்பில் கோலியும் நின்றனர். தன் பக்கம் வந்த 3 கேட்சுகளையும் அற்புதமாகப் பிடித்து அசத்தினார் கோலி. அவை மூன்றும் முக்கிய விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

   7 பெüலர்கள்: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்த ஆட்டத்தில் தோனி 7 பெüலர்களைப் பயன்படுத்தினார். ஜாகீர்கான், உமேஷ் யாதவ், பிரக்யான் ஓஜா, அஸ்வின், சேவாக், ரெய்னா, சச்சின் ஆகியோர் பந்துவீசினர்.

   சுருக்கமான ஸ்கோர்

   இந்தியா -438 (புஜாரா 159, தோனி 73, கோலி 58, சேவாக் 47, ஜீதன் படேல் 4வி/100, பெüல்ட் 3வி/93)

   நியூஸிலாந்து-106/5 (வில்லியம்சன் 32, பிராங்க்ளின் 31*, அஸ்வின் 3வி/30, பிரக்யான் ஓஜா 2வி/35)

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai