சுடச்சுட

  

  யஷ்விர் சிங், பெர்னாண்டஸ் உள்ளிட்ட 6 பேருக்கு துரோணாச்சார்யா விருது

  Published on : 26th September 2012 11:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a2

   புது தில்லி, ஆக.24: யோகேஷ்வர் தத்தின் பயிற்சியாளர் யஷ்விர் சிங், கியூபாவைச் சேர்ந்த குத்துச்சண்டை பயிற்சியாளரான பி.ஐ.பெர்னாண்டஸ் உள்ளிட்ட 6 பேர் துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

   வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியாவின் கணவரும், பயிற்சியாளருமான வீரேந்திர பூனியா, சுனில் தவாஸ் (கபடி), ஹரிந்தர் சிங் (ஹாக்கி), டாக்டர் சத்யபால் (பாரா ஒலிம்பிக்) ஆகியோர் துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மற்ற 4 பயிற்சியாளர்கள். துரோணாச்சார்யா விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுப் பயிற்சியாளர் பி.ஐ.பெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

   தட கள பயிற்சியாளர் ஜெ.எஸ்.பாட்டியா, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் பவானி முகர்ஜி ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

   வழக்கமாக ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 5 பேருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டி, பயிற்சியாளர்களின் சிறப்பான செயல்பாடு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு துரோணாச்சார்யா விருதின் எண்ணிக்கை 8 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

   ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் அஸ்லம் ஷேர் கான் தலைமையிலான குழு மேற்கண்டவர்களின் பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கு தேர்வு செய்துள்ளது.

   4 பேருக்கு தயான் சந்த் விருது: ஜக்ராஜ் சிங் (தட களம்), குந்தீப் குமார் (ஹாக்கி), வினோத் குமார் (மல்யுத்தம்), சுக்பிர் சிங் (ஊனமுற்றோர் விளையாட்டு) ஆகியோர் தயான் சந்த் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

   பொதுவாக ஓர் ஆண்டில் 3 பேருக்கு மட்டுமே தயான் சந்த் விருது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டில் ஒலிம்பிக் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு விருதின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு விருதுகளுக்கும் ரூ. 5 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

   விளையாட்டை ஊக்குவித்து வரும் அமைப்புகளுக்கு வழங்கப்படும் ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹன் புரஸ்கார் விருதுக்கு இந்திய உருக்கு ஆணையம் (செயில்), ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (ஆர்எஸ்பிபி), சர்வீசஸ் விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் (எஸ்எஸ்சிபி), ஏர் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுடன் கேடயம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

   இந்த விருதுகள் வரும் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் வழங்கப்படும்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai