Enable Javscript for better performance
இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: நியூஸிலாந்தை சுருட்டினார் அஸ்வின்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி: நியூஸிலாந்தை சுருட்டினார் அஸ்வின்

    Published on : 26th September 2012 11:34 AM  |   அ+அ அ-   |    |  

    3a

    ஹைதராபாத், ஆக.26: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்திய அணி.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் இன்னிங்ûஸப் போலவே 2-வது இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூஸிலாந்தின் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

    ஆந்திரத் தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 134.3 ஓவர்களில் 438 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய நியூஸிலாந்து அணி 61.3 ஓவர்களில் 159 ரன்களில் சுருண்டு பாலோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவைவிட 279 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நியூஸிலாந்து, 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது. மெக்கல்லம் 16, கேன் வில்லியம்சன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    மெக்கல்லம்-வில்லியம்சன் போராட்டம்: 4-வது நாளான ஞாயிற்றுக்கிழமை மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. மெக்கல்லமும், கேன் வில்லியம்சனும் இந்திய பெüலர்களின் பொறுமையை சோதித்தனர்.

    மிகவும் நிதானமாக ஆடியதால் இவர்களை வீழ்த்த இந்திய பெüலர்கள் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. மதிய உணவு இடைவேளை வரை அவர்களை வீழ்த்த முடியவில்லை. மதிய உணவு இடைவேளையின்போது அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது.

    திருப்புமுனையை ஏற்படுத்திய உமேஷ்: இதன்பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது இந்த ஜோடியைப் பிரித்தார் உமேஷ் யாதவ். 130 பந்துகளைச் சந்தித்த மெக்கல்லம் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது.

    இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்த நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள், அடுத்தடுத்து தங்களின் விக்கெட்டை இழந்தனர்.

    கேப்டன் ராஸ் டெய்லர் 7 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். வில்லியம்சன் 52 ரன்களில் ஓஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஃபிளின் 11 ரன்களிலும், ஃபிராங்க்ளின் 5 ரன்களிலும் அஸ்வினின் சுழலில் வீழ்ந்தனர்.

    கடைசி 25 நிமிடங்கள்: தேநீர் இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து.

    இதன்பிறகு ஆட்டம் தொடங்கிய அடுத்த 25 நிமிடங்களிலேயே நியூஸிலாந்தின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. பிரேஸ்வெல் 1, வான்விக் 13 ரன்களிலும், டிரென்ட் பெüல்ட், கிறிஸ் மார்ட்டின் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். இதனால் நியூஸிலாந்து 79.5 ஓவர்களில் 164 ரன்களில் சுருண்டது.

    இதன்மூலம் இந்தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. நியூஸிலாந்து 26 ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், பிரக்யான் ஓஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    அஸ்வின் ஆட்டநாயகன்: இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 85 ரன்களை மட்டுமே கொடுத்து 12 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    9 மாதங்களுக்குப் பிறகு... இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் "ஒயிட் வாஷ்' ஆன இந்திய அணி 9 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அஸ்வின் சாதனை: இந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 42.2 ஓவர்களை வீசி 85 ரன்களை கொடுத்து 12 விக்கெட் வீழ்த்தினார் அஸ்வின். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக 10 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய அஸ்வின், டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சையும் பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே ஓர் இன்னிங்ஸில் அவரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

    நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் எஸ்.வெங்கட்ராகவன் 140 ரன்களை கொடுத்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தியதே நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது. அந்த சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 4 முறை 5 அல்லது அதற்குமேல் விக்கெட் வீழ்த்தியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் அவர் தலா 6 விக்கெட் வீழ்த்தினார்.

    சுழலில் சுருண்ட நியூஸிலாந்து: சுழற்பந்து வீச்சுக்கு முழு அளவில் ஒத்துழைத்த ஹைதராபாத் மைதானத்தில் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் இல்லாதவர்களான நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். கண்ணிமைக்கும் நேரத்தில் சுழன்ற பந்துகளை கணிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். நியூஸிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளில் 18 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வினும், ஓஜாவும் வீழ்த்தினர்.

    மெக்கல்லத்தின் துரதிருஷ்டம்: 2-வது இன்னிங்ஸில் மெக்கல்லம் 42 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். ஆனால் பந்து அவரது பேடில் (கால் காப்புறை) படுவதற்கு முன்பு பேட்டில் பட்டுவிட்டது. இருப்பினும் அதை கவனிக்காத நடுவர் அவுட் கொடுத்தார். தான் அவுட் இல்லை என்பதை உணர்ந்த மெக்கல்லம், கோபத்துடன் வெளியேறினார். டி.ஆர்.எஸ். முறை பயன்பாட்டில் இருந்திருந்தால் மெக்கல்லம் அவுட் ஆவதிலிருந்து தப்பியிருக்கலாம்.

    20 ஆயிரம் ரசிகர்கள்: ஞாயிற்றுக்கிழமை என்பதால் போட்டியைக் காண 20 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். 39 ஆயிரம் பேர் போட்டியை ரசிக்கும் வசதி கொண்ட இந்த மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நாள் மாலை வரையில் 2,500 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த டெஸ்ட்: இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 31-ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

    சுருக்கமான ஸ்கோர்

    இந்தியா -438

    (புஜாரா 159, தோனி 73, கோலி 58, சேவாக் 47,

    ஜீதன் படேல் 4வி/100, பெüல்ட் 3வி/93)

    நியூஸிலாந்து

    முதல் இன்னிங்ஸ்-159 (பிராங்க்ளின் 43*,

    வில்லியம்சன் 32,

    அஸ்வின் 6வி/31,

    பிரக்யான் ஓஜா 3வி/44)

    2-வது இன்னிங்ஸ்-164 (வில்லியம்சன் 52,

    மெக்கல்லம் 42,

    அஸ்வின் 6வி/54

    பிரக்யான் ஓஜா 3வி/48)

    இரு இன்னிங்ஸிலும்

    ஆட்டமிழக்கச் செய்வது

    எளிதல்ல!

    நியூஸிலாந்து அணியை இரு இன்னிங்ஸ்களிலும் ஆட்டமிழக்கச் செய்வது எளிதானதல்ல என்று இந்திய கேப்டன் தோனி கூறினார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற பிறகு அவர் மேலும் கூறியது: போட்டியின்போது அவ்வப்போது மழை பெய்ததால் எத்தனை ஓவர்கள் வரை பந்துவீச முடியும் என்பது தெரியவில்லை. கால நிலையுடன் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டதாலேயே நியூஸிலாந்துக்கு பாலோ ஆன் கொடுத்தோம்.

    இந்தப் போட்டியில் இந்திய வீரர்களின் பீல்டிங் சிறப்பாக அமைந்தது. வீரேந்திர சேவாக் அற்புதமாக கேட்ச் பிடித்தார். கோலியும் சேவாக்குக்கு நிகராக பீல்டிங் செய்தார். தொடர்ந்து இதுபோன்று பீல்டிங் செய்ய விரும்புகிறோம். புஜாரா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார் என்றார்.

    19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்த தோனி, "கேப்டன் உன்முகுத் சிறப்பாக பேட் செய்தார்' என்று குறிப்பிட்டார்.

    புஜாராவுக்கு காயம்

    பீல்டிங்கின்போது சேதேஷ்வர் புஜாராவுக்கு காயம் ஏற்பட்டது. ஏற்கெனவே அவர் அறுவை சிகிச்சை செய்த வலது கால் மூட்டிலேயே இப்போதும் அடிபட்டுள்ளது. காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 33-வது ஓவரின்போது மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், கடைசி வரை களத்துக்கு திரும்பவில்லை.

    இருப்பினும் அவர் நலமாக இருப்பதாகவும், பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் புஜாரா 159 ரன்கள் குவித்தார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp