சுடச்சுட

    
    4a

    டெளன்ஸ்வில்லே, ஆக.26: 19 வயதுக்குட்பட்டோர் (யு-19)உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 3-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

    ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

    முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 14 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. கேப்டன் உன்முகுத் சந்த் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

    தடுமாற்றம்: ஆஸ்திரேலியாவின் டெüன்ஸ்வில்லேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களை இந்திய வீரர் சந்தீப் சர்மா நிலைகுலையச் செய்தார்.

    இதனால் தொடக்க வீரர்கள் பியர்சன் ரன் ஏதுமின்றியும், பான்கிராப்ட் 2 ரன்களிலும் நடையைக் கட்டினர். பின்னர் வந்த பேட்டர்சன் 16 ரன்களிலும், புச்சனன் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க 11.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ஆஸ்திரேலியா.

    சரிவிலிருந்து மீட்ட கேப்டன்: இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் போசிஸ்டோவும், டிராவிஸ் ஹெட்டும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ஆஸ்திரேலியா 103 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிஸ் ஹெட் 37 ரன்களில் ரன் அவுட்டானார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து போசிஸ்டோவுடன் இணைந்தார் ஆஷ்டன் டர்னர். போசிஸ்டோ நிதானமாக ஆடியபோதும், டர்னர் வேகமாக விளையாடினார். இதனிடையே போசிஸ்டோ அரைசதம் கடந்தார். மறுமுனையில் 50 பந்துகளைச் சந்தித்த டர்னர் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர் வந்த கிரிகோரி 4 ரன்களிலும், பாரிஸ் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. கேப்டன் போசிஸ்டோ 120 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 87 ரன்களும், சாந்து 6 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்தியத் தரப்பில் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளையும், ரவிகாந்த் சிங், அபராஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    அதிர்ச்சித் தொடக்கம்: 226 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரசாந்த் சோப்ரா ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆட்டமிழந்தார்.

    இதையடுத்து கேப்டன் உன்முகுத்துடன் ஜோடி சேர்ந்தார் தமிழக வீரர் அபராஜித். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பௌலர்களை பதம்பார்த்தது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 60 ரன்களை எட்டியது.

    இந்திய அணி 75 ரன்களை எட்டியபோது அபராஜித் ஆட்டமிழந்தார். 38 பந்துகளைச் சந்தித்த அவர் 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் வந்த விஹாரி 4, விஜய் úஸôல் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா சற்று தடுமாற்றம் கண்டது. அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து உன்முகுத்துடன் இணைந்தார் ஸ்மித் படேல். தொடர்ந்து சிறப்பாக ஆடிய உன்முகுத் பவுண்டரி அடித்து அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.

    உன்முகுத் சதம்: ஒருமுனையில் ஸ்மித் நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் உன்முகுத் தொடர்ந்து வேகம் காட்டினார். இதனால் பந்து எல்லைக்கு சென்று கொண்டேயிருந்தது. இவர்களை வீழ்த்த ஆஸ்திரேலியர்கள் போராடியபோதும் அது கடைசி வரை நடக்கவில்லை. கிரிகோரி வீசிய 46-வது ஓவரின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து சதத்தைப் பூர்த்தி செய்தார் உன்முகுத். அவரைத் தொடர்ந்து ஸ்மித் படேல் அரை சதமடித்தார்.

    ஸ்டிகீட்டீ வீசிய 47-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விளாசினார் உன்முகுந்த். டர்னர் வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஸ்மித் படேல் பவுண்டரியை விளாச இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. உன்முகுத் 130 பந்துகளில் 6 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 111 ரன்களும், ஸ்மித் படேல் 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்திய கேப்டன் உன்முகுத் ஆட்டநாயகனாகவும், ஆஸ்திரேலிய கேப்டன் போசிஸ்டோ தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

    3-வது முறையாக... இதன்மூலம் 3-வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி. முன்னதாக 2000-ல் முகமது கைஃப் தலைமையிலும், 2008-ல் விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அதிகபட்சமாக 3 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளன.

    தலா ரூ.20 லட்சம் பரிசு

    19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உலகக் கோப்பையைக் கைப்பற்றியுள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள். கடந்த ஆண்டு சீனியர் உலகக் கோப்பையை கைப்பற்றினோம்.

    இந்த ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறோம். இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த நாள். அணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.20 லட்சமும், அணியின் அதிகாரிகளுக்கு தலா ரூ.15 லட்சமும் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.



    குவியும் வாழ்த்து!

    புது தில்லி, ஆக.26: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு அமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மாக்கன், தொழிலதிபர்கள் ஆனந்த மகிந்த்ரா, விஜய் மல்லையா உள்ளிட்டோர் டுவிட்டர் மூலமாக வாழ்த்துக் கூறியுள்ளனர்.

    ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி, மேற்கிந்தியத் தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், ஒலிம்பிக் சாம்பியன் அபிநவ் பிந்த்ரா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai