சுடச்சுட

  
  a3

   புது தில்லி, ஆக. 27: கெüதம் கம்பீரை விட, 19-வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முக்த் சந்த் சிறந்தவர் என்று பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கூறியுள்ளார்.

   இருவருமே சஞ்சய் பரத்வாஜின் பயிற்சி பெற்று தங்கள் திறமையை மேம்படுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது. இதில் சந்த் சதமடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

   இந்நிலையில் அவரது பயிற்சியாளர் பரத்வாஜ் கூறியிருப்பது: சந்த்தின் வயதில் கம்பீர் இருந்தபோது இவ்வளவு திறமையானவராக இல்லை என்பது உண்மைதான். வயதின் அடிப்படையில் ஒப்பிடும்போது இப்போதைய நிலையில் கம்பீரைவிட சந்த் சிறந்த வீரர்.

   திறமையும், கடின உழைப்பும் உள்ளவர் சந்த். வழக்கமாக இந்த வயதில் இளைஞர்களுக்கு பல்வேறு தேவையற்ற விஷயங்களில் கவனம் செல்லும். ஆனால் கல்லூரி மாணவரான சந்த் கிரிக்கெட்டை மட்டுமே மனதில் கொண்டுள்ளார். இதுவே அவரது அபாரத் திறமைக்குக் காரணம். இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அடுத்த ஆண்டில் நிச்சயமாக அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்.

   கம்பீர், சந்த் இருவருமே சிறந்த கிரிக்கெட் வீரர்களாக வளர்வதற்கு அவர்களது குடும்பப் பின்னணியும் ஒரு காரணம். குடும்பத்தின் ஆதரவு வலுவாக இருக்கும்போது திறமை மேலும் அதிகரிக்கிறது.

   தங்கள் மகனை சிறந்த கிரிக்கெட் வீரராக்க வேண்டுமென்று கூறி, பை நிறைய பணத்துடன் என்னிடம் ஏராளமான பெற்றோர்கள் வருகின்றனர். ஆனால் நான் அவர்களிடம் கூறுவது, "இளைஞர்களின் கிரிக்கெட் திறமையை மேம்படுத்துபவராகவும், நுணுக்கங்களை கற்றுக் கொடுப்பவராகவும் மட்டுமே நான் இருக்க முடியும். வீரர்களிடம் அடிப்படையில் சிறிது திறமை, தீவிர ஆர்வம், விடாமுயற்சி ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும்' என்பதுதான் என்றார் பரத்வாஜ்.

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai