சுடச்சுட

  
  a1

  புது தில்லி, ஆக. 27: சச்சினுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டில் சச்சின் போற்றுதலுக்குரியவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

   இந்த ஆண்டில் 5 சதங்களை எடுத்து சாதனை படைத்துள்ள கோலி, மிக வேகமாக 1000, 3000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனைகளுக்கும் உரியவராவார். இதையடுத்து அவர் சச்சினின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற தனது சாதனையை எட்ட கோலி தகுதியான நபர்தான் என்று சச்சினும் கூறியுள்ளார்.

   இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கோலி இது தொடர்பாகக் கூறியது: தொடக்கத்தில சிலர் என்னை சச்சினுடன் ஒப்பிட்டபோது நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்று நினைத்தேன். ஆனால், அவருடன் என்னை ஒப்பிடுவது மிகவும் மிகையானது. சச்சின் எனது போற்றுதலுக்கு உரிய நபர். அவரைப் போல யாராலும் தொடர்ந்து சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியாது. 100 சதங்கள் என்பது அவரால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை.

   அப்படி ஒரு சாதனையை நானும் செய்வேன் என்று எப்போதும் நினைக்கவில்லை. 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்து விளையாடினால், அது எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைத்தான் அளிக்கும். எனவே இப்போதைய சூழ்நிலையில் எனது ஆட்டத்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறேன் என்றார் கோலி.

   தோனியிடம் கற்று வருகிறேன்: இந்திய அணியின் துணைக் கேப்டனாக இருப்பது குறித்துப் பேசிய அவர், துணை கேப்டனாக நான் தேர்வு செய்யப்பட்டது எனக்கே ஆச்சரியம் அளித்த நிகழ்வு. இப்போதைய கேப்டனாக உள்ள தோனி, அணிக்காக பல விஷயங்களைச் செய்துள்ளார். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களைக் கற்று வருகிறேன். அவருக்கு அடுத்து நான் கேப்டன் என்று கூறிக் கொள்ள விரும்பவில்லை.

   புற்று நோயிலிருந்து விடுபட்டுள்ள யுவராஜ் சிங்கை இந்திய அணியில் சேர்த்துள்ளது சரியான முடிவு. இது உணர்ச்சிவசப்பட்ட முடிவு என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ள கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

   கோபம், அதிக ஆக்ரோஷம்: மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்துவதும், அதிகமாக ஆக்ரோஷப்படுவதும் எனது பெரிய குறைபாடாக உள்ளது. ஆட்டமிழந்தால் கோபப்பட்டு கத்துவது என்பது சிறுவயதில் இருந்தே பழக்கமாக உள்ளது. சிறிய வயதில் கோபப்பட்டு நிறைய பேட்களை உடைத்து வீசி இருக்கிறேன்.

   இப்போதும் பல சமயங்களில் மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இதனைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறேன் என்றார் கோலி.

   

   

   

   

   

   

   

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai