சுடச்சுட

  

  விளையாட்டா? படிப்பா? மாணவர்களே தீர்மானிக்கட்டும்: ஒலிம்பிக் நாயகன் சுஷில் குமார்

  Published on : 26th September 2012 11:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  a2

  சென்னை, ஆக. 27: மாணவர்கள் தங்கள் எதிர்காலத்துக்கு எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்று லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷில் குமார் பேசினார்.

   மல்யுத்தத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷில் குமார், வெண்கல பதக்கம் வென்ற யோகேஷ்வர் தத், அவர்களது பயிற்சியாளர் யஷ்வீர் சிங் ஆகியோருக்கு வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில், சென்னை வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

   சுஷில் குமாருக்கு ரூ. 10 லட்சமும், யோகேஷ்வர் தத், யஷ்வீர் சிங் ஆகியோருக்கு தலா ரூ. 5 லட்சமும் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. வேலம்மாள் பள்ளியின் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர் மாணவர்களை சுஷில் குமார், யோகேஷ்வர் தத், யாஷ்வீர் சிங் ஆகியோர் வாழ்த்தினர்.

   நிகழ்ச்சியில் சுஷில்குமார் பேசியது: "நானும் யோகேஷ்வரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதற்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் யஷ்வீர் சிங். அவரிடம் நாங்கள் அளவு கடந்த பக்தியுடன் இருந்ததே இந்த சாதனைக்குக் காரணம். அதே போல மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களிடம் பக்தியுடன் இருக்க வேண்டும். எதிர்காலத்துக்கு விளையாட்டைத் தேர்ந்தெடுப்பதா அல்லது படிப்பை தேர்வு செய்வதா என்பதை மாணவர்களே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களை யாரும் இதைத்தான் செய்யவேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது.

   பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு பின்பு, மல்யுத்தப் போட்டிகளுக்கு அரசு சிறப்பான ஆதரவு அளித்து வருகிறது. கடினமான நேரங்களில் மனவலிமையுடன் செயல்பட்டால் சாதிக்கலாம்' என்றார் சுஷில் குமார்.

   யோகேஷ்வர் தத்: "கடின உழைப்பு இருந்தால் லட்சியத்தை அடையலாம். மிகப்பெரிய லட்சியங்களை சவாலுடன் எதிர்கொண்டு அவற்றை அடைய வேண்டும். பிரச்னைகளை கண்டு அச்சப்படக் கூடாது.

   நாங்கள் இருவரும் எங்கள் லட்சியத்தை அடைய கடினமாக உழைத்தோம். அப்போது ஏற்பட்ட வலிகள் இப்போது மறைந்துவிட்டன. ஒலிம்பிக் போட்டியின் போது கண்ணில் காயம் ஏற்பட்டது. ஆனால் எப்படியாவது பதக்கம் வெல்ல வேண்டும் என்று உறுதியுடன் போராடினேன். நாங்கள் ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் வரை பயிற்சி செய்கிறோம். மல்யுத்தப் போட்டிகளுக்கு அரசு ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது', என்றார்.

   பயிற்சியாளர் யஷ்வீர் சிங்: சுஷில் குமாரும், யோகேஷ்வர் தத்தும் என்னிடம் வரும் போது 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் மிகப்பெரிய லட்சியங்கள் இருந்தன. அடுத்தடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் வீரர் சுஷில்குமார்.

   கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்கள் இவர்கள் இருவரையும் தங்கள் முன்மாதிரியாக நினைத்து இலக்குகளை அடைய வேண்டும். பெய்ஜிங் ஒலிம்பிக்கில் யோகேஷ்வர் பதக்கம் வெல்லாதது ஏமாற்றம் அளித்தது. அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சிறிது காலம் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த யோகேஷ்வர், லண்டனில் பதக்கம் வென்றுள்ளார்' என்றார். பின்னர் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மூவரும் பதிலளித்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai