சுடச்சுட

  
  spt3

  செளதாம்டன், ஆக. 29: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

  முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 40.4 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

  தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது ஆட்டம் செüதாம்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

  ஸ்மித், ஆம்லா ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர். 19.2 ஓவர்களில் ஸ்கோர் 89 ஆக இருந்தபோது ஸ்மித் ஆட்டமிழந்தார். அவர் 76 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.

  அடுத்து வந்த டுமினி 14 ரன்களுக்கும், எல்கர் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் ஆம்லா சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது.

  தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆம்லா 96 பந்துகளில் சதத்தை எட்டினார். மறுமுனையில் விளையாடிய கேப்டன் டி வில்லியர்ஸ் 28 ரன்கள் எடுத்து 43-வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து டு பிளெஸிஸ் களமிறங்கினார். அப்போது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 230 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.

  சதமடித்த பின் ஆம்லா சிறிது அதிரடி காட்டினார். பந்துகள் அவ்வப்போது எல்லைக் கோட்டைக் கடந்தன. 150 ரன்களை எட்டிய ஆம்லா, கடைசி ஓவரில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 287 ரன்கள் எடுத்தது. டு பிளெஸிஸ் 22 ரன்களுடனும், பார்னெல் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

  இங்கிலாந்து சுருண்டது: 288 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் குக், முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

  அடுத்து பெல்லுடன் டிராட் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடினர். எனினும் டிராட் 23 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். சிறிது நேரத்திலேயே பெல்லும் பெவிலியன் திரும்பினார். அவர் 45 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த போபாரா 16 ரன்கள், மோர்கன் 27 ரன்கள், கீஸ்வெட்டர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது தாக்குப் பிடித்து விளையாடிய படேல் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  பிரெஸ்னன், ஸ்வான் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டாக ஆண்டர்சன் 5 ரன்களில், ரன் அவுட் ஆனார். இதனால் 40.4 ஓவர்களில் இங்கிலாந்து 207 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. ஃபின் 15 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கல், பார்னெல், பீட்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 150 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஆம்லா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

  இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai