சுடச்சுட

  
  spt4

  பெங்களூர், ஆக. 30: ஓய்வு பெறும் நாள் இப்போதைக்கு வராது என்று நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

  பெங்களூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் 2011-ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது சச்சினுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சச்சின் பேசியது: இப்போதைய சூழ்நிலையில் நான் மிகவும் உற்சாகத்துடன் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். எனவே ஓய்வு பற்றி சிந்திக்கவே இல்லை. ஓய்வு பெற வேண்டுமென்றால் அதற்குக் காரணம் வேண்டும். அப்படி எந்த காரணமும் எனக்கு இல்லை.

  கிரிக்கெட் பேட் எனது கையில் இல்லாமல் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே நான் ஓய்வு பெறும் நாள் இப்போதைக்கு வராது. ஓய்வு பெற வேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்படும் நேரத்தில் அது குறித்துத் தெரிவிப்பேன் என்றார் சச்சின்.

  இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் பேசுகையில், "100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் பங்கேற்க வேண்டும் என்பது எனது ஆசை. இதுவரை 97 டெஸ்ட்களில் விளையாடியுள்ளேன்.

  பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த விடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் எப்போதும் பேட்டிங்கை தொடங்குவேன்.

  அதுவே எனது சிறப்பான ஆட்டத்துக்கும், ஒருநாள் ஆட்டத்தில் 219 ரன்கள் என்ற அதிகபட்ச ரன்னை நான் எடுக்கவும் இதுவே காரணமாக இருந்தது.

  எனினும் ஒருநாள் ஆட்டத்தில் சச்சின் 200 ரன்கள் எடுத்தது எனக்கும் மிகவும் மகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது. அவர் 190 ரன்களை எட்டியவுடனேயே அணி வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கைகளைத் தட்டத் தொடங்கினோம். அவர் 200 ரன்களை எட்டியபோது நாங்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை' என்றார் சேவாக்.

  சச்சின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 200 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சேவாக், மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் தனி ஒரு வீரரின் அதிகபட்ச ரன் ஆகும். சேவாக், கம்பீர் ஆகியோருக்கும் இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai