Enable Javscript for better performance
ஆஸ்திரேலியாவுக்கு 632 ரன்கள் வெற்றி இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவுக்கு 632 ரன்கள் வெற்றி இலக்கு

    By dn  |   Published on : 03rd December 2012 12:51 AM  |   அ+அ அ-   |    |  

    ABDE2

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 632 ரன்களை வெற்றி இலக்கா நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

    இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி கடின இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்துள்ளனர்.

    பெர்த்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 225 ரன்களுக்கும் ஆஸ்திரேலியா 163 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

    பின்னர் 2ஆம் நாளில் 2ஆவது இன்னிங்ûஸ தென் ஆப்பிரிக்கா தொடங்கியது.

    ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்திருந்தது. 3ஆம் நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. ஆம்லா 99 ரன்களுடனும், காலிஸ் 17 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.

    ஆம்லா சதம்: ஆட்டம் தொடங்கி 3 பந்துகளைச் சந்தித்த ஆம்லா தனது 18ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 87 பந்துகளில் இந்த ரன்களை எடுத்தார். தொடர்ந்து ஆடிய காலிஸ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 287.

    காலிஸைத் தொடர்ந்து களமிறங்கிய டிவில்லியர்ஸூடன் ஜோடி சேர்ந்தார் ஆம்லா. இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் விரட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

    தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த டிவில்லியர்ஸ் 50 ரன்களைக் கடந்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ஆம்லாவின் வேகமான ஆட்டத்தைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா வீரர்கள் பல முயற்சி மேற்கொண்டும் அதற்குப் பயனில்லை.

    இரட்டைச் சதம் "மிஸ்': எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஆம்லா, இரட்டைச் சதமடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 196 எடுத்திருந்தபோது ஜான்ஸன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 436.

    ஆம்லா ஆட்டமிழந்தவுடன் அடுத்து களமிறங்கிய எல்கர் ரன் ஏதுமின்றியும், டூபிளெஸ்ஸிஸ் 27 ரன்களிலும், ராபின் பீட்டர்சன்  ரன் ஏதுமின்றியும் வெளியேறினர்.

    ஆனால் மறுபுறம் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டிவில்லியர்ஸ். 98 பந்துகளில் அரைசதமடித்த அவர் 131 பந்துகளில் சதமடித்தார். இது அவரின் 14 ஆவது சதமாகும். 15 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உதவியுடன் அவர் இந்த ரன்களைச் சேர்த்தார். சதமடித்த பின்பும் அவரின் அதிரடி நிற்கவில்லை.

    இறுதியில் 169 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் ஆட்டமிழக்க 569 ரன்களில் தென் ஆப்பிரிக்காவின் 2ஆவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

    ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும் ஜான்ஸன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இலக்கு 632: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 62 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரையும் சேர்த்து 632 ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 40 ரன்கள் எடுத்துள்ளது. கோவன் 9 ரன்களுடனும், வார்னர் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட 2ஆவது கடினமான இலக்கு இதுவாகும். இதற்கு முன்பு 1928ஆம் ஆண்டில் கிரிக்கெட் மேதை டான் பிராட்மேனின் முதல் டெஸ்ட் போட்டியில் 742 ரன்களை இங்கிலாந்து அணி நிர்ணயித்ததே அதிகபட்ச இலக்காக இருந்து வருகிறது.

    பாண்டிங்குக்கு இப்போட்டி கடைசி டெஸ்ட் போட்டியாகும். அதனால் இப்போட்டியை வென்று பாண்டிக்கு பரிசாக அளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் கருதினர்.

    ஆனால், இப்போட்டி அந்த அணிக்கு எதிராக அமைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் ஆட்டமிழந்த பாண்டிங், 2ஆவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.

    அதிகபட்ச சேஸ்: 2003ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் 418 ரன்களை சேஸ் செய்ததே இன்று வரை சாதனையாக இருந்து வருகிறது. அதனால் இப்போட்டியில் 632 ரன்களை சேஸ் செய்து ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது என்பது கடினமே.

    சுருக்கமான ஸ்கோர்
    முதல் இன்னிங்ஸ்: தென் ஆப்பிரிக்கா-225,  ஆஸ்திரேலியா-163

    2ஆவது இன்னிங்ஸ்: தென் ஆப்பிரிக்கா-569

    (ஆம்லா 196, டிவில்லியர்ஸ் 169, ஸ்டார்க் 6வி/154, ஜான்ஸன் 4வி/110)

    வெற்றி இலக்கு-632

    ஆஸ்திரேலியா-விக்கெட் இழப்பின்றி 40 (வார்னர் 29*, கோவன் 9*)

    kattana sevai