சுடச்சுட

  
  spt2

  இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது.

  அந்த அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் இந்தத் தொடரில் தொடர்ந்து 3ஆவது முறையாக சதமடித்துள்ளார்.

  முன்னதாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ஓவர்களில் 316 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

  இந்தியாவின் மிகப்பெரிய மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல்நாளான புதன்கிழமை ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. தோனி 22 ரன்களுடனும், ஜாகீர்கான் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

  தோனி அரைசதம்: 2ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் இரு முறை ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய ஜாகீர் கான் 6 ரன்கள் எடுத்திருந்தபோது பனேசர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.

  இதையடுத்து வந்த இஷாந்த் சர்மா ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே பனேசர் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். பின்னர் பிரக்யான் ஓஜா களம்புகுந்தார். அப்போது தோனி 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

  மான்டி பனேசர் வீசிய 98ஆவது ஓவரின் 5ஆவது ஓவரில் இமாலாய சிக்ஸர் ஒன்றை தோனி விளாச இந்தியா 300 ரன்களைக் கடந்தது. அடுத்த பந்திலும் அவர் சிக்ஸர் அடித்தார். இதன்மூலம் 46 ரன்களை எட்டிய தோனி, அரைசதமடிக்க மேலும் 6 ஓவர்களை எடுத்துக் கொண்டார்.

  ஒருவழியாக ஸ்டீவன் ஃபின் வீசிய 105ஆவது ஓவரில் பவுண்டரி அடித்து அரைசதம் கண்ட தோனி, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இதனால் மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 316 ரன்களில் முடிவுக்கு வந்தது.

  114 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில் 19 பந்துகளைச் சந்தித்த ஓஜா ஒரு ரன்கூட எடுக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.

  இங்கிலாந்து தரப்பில் மான்டி பனேசர் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  இங்கிலாந்து பதிலடி: இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் அலாஸ்டர் குக்கும், நிக் காம்ப்டனும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்திய கேப்டன் தோனி அவ்வப்போது பெüலர்களை மாற்றிப்பார்த்தாலும் அதனால் எவ்வித பலனும் இல்லை. இந்திய பெüலர்களை சிறப்பாக எதிர்கொண்ட குக் 87 பந்துகளிலும், நிக் காம்ப்டன் 123 பந்துகளிலும் அரைசதம் கண்டனர்.

  குக் சதம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அலாஸ்டர் குக், அஸ்வின் வீசிய 52ஆவது ஓவரில் 3 ரன்கள் எடுத்தபோது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 23ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அந்த அணி 165 ரன்களை எட்டியபோது இந்தியாவின் போராட்டத்துக்கு பலன் கிடைத்தது. நிக் காம்ப்டன் ஓஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 137 பந்துகளைச் சந்தித்த காம்ப்டன் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து ஜொனாதன் டிராட் களம்புகுந்தார். 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 73 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்துள்ளது. குக் 236 பந்துகளில் 1 சிக்ஸர், 19 பவுண்டரிகளுடன் 136 ரன்களும், டிராட் 67 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

  3ஆவது நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இங்கிலாந்து அணி இன்னும் 100 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. அந்த அணியின் கைவசம் இன்னும் 9 விக்கெட்டுகள் இருப்பதால் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சாதனை மன்னன் குக்!

  முதல் இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம் 23ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார் குக். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதமடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தார். கேப்டனாக இருந்த 5 போட்டிகளிலும் சதமடித்த ஒரே கேப்டன் என்ற சாதனையும் அவர் வசமாகியுள்ளது. இதுதவிர குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் 7000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 27 வயது 347 நாள்களில் குக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

  இதற்கு முன்னர் சச்சின் 28 வயது 193 நாள்களில் 7000 ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது. இப்போது அதை குக் முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த 10ஆவது இங்கிலாந்து வீரர் குக். இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய குக், இதுவரை 493 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் இந்திய டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 1961இல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அப்போதைய கேப்டன் டெட் டெக்ஸ்டர்ஸ் அடித்த 403 ரன்களே இதுவரை சாதனையாக இருந்தது. முன்னதாக குக் 17 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை புஜாரா கோட்டைவிட்டார். அதனால் வாழ்வுபெற்ற குக் சதமடித்ததோடு, பல்வேறு சாதனைகளையும் படைத்து இங்கிலாந்துக்கு வலுவான தொடக்கத்தையும் ஏற்படுத்திவிட்டார்.

  ஈடன் கார்டனில் 31ஆவது சதம்: கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 31 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வீரர்கள் சார்பில் 15 சதம் அடிக்கப்பட்டுள்ளது. குக் அடித்த சதம்தான் 31ஆவது சதம்.

  இதன்மூலம் கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் அதிக சதமடிக்கப்பட்ட இந்திய மைதானம் என்ற பெருமை ஈடன் கார்டனுக்கு கிடைத்துள்ளது. ஈடன் கார்டனுக்கு அடுத்தபடியாக ஆமதாபாதில் 23 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

  குக்கால் 50 சதமடிக்க முடியும்

  இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக் ஓய்வுபெறுவதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் 50 சதமும், 15 ஆயிரம் ரன்களுக்கு அதிகமாகவும் குவிக்க முடியும் என்று இந்தியாவின் முன்னாள் கேப்டன் சுநீல் காவஸ்கர் தெரிவித்துள்ளார்.

  குக்கை வெகுவாகப் பாராட்டியுள்ள அவர் மேலும் கூறுகையில், "கிரிக்கெட் வாழ்க்கையில் காயம் எப்போது ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. குக் காயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்பட்சத்தில் 50 சதம், 15 ஆயிரம் ரன்கள் என்பது மிகத் தொலைவில் இல்லை' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai