சுடச்சுட

  
  spt2

  சென்னை, மே 25: ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸýக்கு 223 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

  முதலில் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், 58 பந்துகளில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்தார்.

  சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த 2-வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் சேவாக், சென்னையை பேட் செய்ய அழைத்தார். சன்னி குப்தா வீசிய முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் பவுண்டரியை அடித்தார் விஜய். இதனால் முதல் ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன.

  மைக் ஹசி நிதானமாக ஆடியபோதும் விஜய் வேகமாக விளையாடியதால் 6 ஓவர்களில் 52 ரன்களை எட்டியது சென்னை. சூப்பர் கிங்ஸ் 68 ரன்களை எட்டியபோது மைக் ஹசி வெளியேறினார். 22 பந்துகளைச் சந்தித்த அவர் 20 ரன்களே எடுத்தார்.

  இதையடுத்து விஜயுடன் இணைந்தார் ரெய்னா. விக்கெட் விழாததால் 11-வது ஓவரை வீச வந்தார் கேப்டன் சேவாக். ஆனால் அந்த ஓவரை பதம்பார்த்த விஜய், 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்தார். நெகி வீசிய 14-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸர் அடித்த ரெய்னா, அடுத்த பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து தோனி களம் புகுந்தார். சன்னி குப்தா வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் முரளி விஜய் சிக்ஸர் அடிக்க, 3 மற்றும் 4-வது பந்துகளில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார் தோனி.

  சென்னை 173 ரன்களை எட்டியபோது தோனியின் விக்கெட்டை இழந்தது. 10 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து அல்பி மோர்கல் களம்கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய விஜய், 51 பந்துகளில் சதமடித்தார்.

  அல்பி மோர்கல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, பிராவோ களமிறங்கினார். வருண் ஆரோன் வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட பிராவோ இரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாச அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆட்டத்தின் கடைசிப் பந்தில் முரளி விஜய் ரன் அவுட்டாக 5 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது சூப்பர் கிங்ஸ். பிராவோ 12 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

  அதிகபட்ச ஸ்கோர்: சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்.இதற்கு முன் டெல்லியில் நடைபெற்ற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அடித்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

  அதிவேக சதம்: இந்த ஐபிஎல் போட்டியில் விஜய் அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

  இந்த ஐபிஎல் போட்டியில் இதற்கு முன் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், ஓர் அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு பலம் சேர்த்துவிட்டார்.

  விஜய் அடித்த சதம், இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம். இந்தஐபிஎல் போட்டியில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

  சிக்ஸரான கேட்ச்! விஜய் 54 ரன்களில் இருந்தபோது சேவாக் பந்துவீச்சில் தூக்கி அடித்தார். பவுண்டரி எல்லையில் இருந்த ராஸ் டெய்லர், அதை அற்புதமாக கேட்ச் செய்தபோதும், அவரது கால் எல்லைக் கோட்டில் பட்டதால் அது சிக்ஸர் ஆனது. இதனால் விஜய் அவுட் ஆவதில் இருந்து தப்பினார்.

  டெல்லி அணியில் வருண் ஆரோன் 4 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 63 ரன்கள் கொடுத்தார்.

  135 வீரர்களுக்கு ரூ.53 கோடி

  ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரொக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதில் 135 வீரர்களுக்கு ரூ.53 கோடி வழங்கப்பட்டது. இந்தத் தொகையை பிசிசிஐ தலைவர் என்.சீனிவாசன், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் வழங்கினர். 135 வீரர்களின் சார்பில் ஸ்ரீகாந்த், மதன்லால், ராபின் சிங், சேத்தன் செüகான், எல்.சிவராமன் கிருஷ்ணன் உள்ளிட்ட 16 பேர் பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai