சுடச்சுட

  
  spt5

  கோவில்பட்டி, மே 26: கோவில்பட்டியில் நடைபெற்ற சாரா கோப்பைக்கான அகில இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் மைசூர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

  தூத்துக்குடி மாவட்ட வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவில்பட்டி ராஜீவ்காந்தி ஹாக்கி கிளப் சார்பில் திட்டங்குளம் பாரதி ஹாக்கி மைதானத்தில் கடந்த 21-ம் தேதி முதல் அகில இந்திய மகளிர் ஹாக்கி போட்டி நடைபெற்று வந்தது.

  மைசூர் சாம்பியன்: 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மைசூர் விளையாட்டு விடுதி அணியும், திருப்பூர் மாவட்ட அணியும் மோதின. மைசூர் வீராங்கனைகள் ரஸ்மி 3-வது நிமிடத்திலும், ரஞ்சிதா 7-வது நிமிடத்திலும் கோலடிக்க முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது அந்த அணி. 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்குமே கோல் கிடைக்கவில்லை. இதனால் 2-0 என்ற கணக்கில் திருப்பூரை வெற்றி கண்டது மைசூர்.

  3-வது இடம்பிடித்த ஈரோடு: முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை சாய், ஈரோடு கே.ஓ.எம். அகாதெமி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க டை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஈரோடு அணி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

  பரிசளிப்பு விழா: பரிசளிப்பு விழாவுக்கு பசும்பொன் தேவர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். சாரா தங்கமாளிகை அதிபர் அப்துல் ஹக்கீம் உசேன், திட்டங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பொன்ராஜ், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அதிகாரி தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு மாநில ஹாக்கி பொறுப்பாளர் செல்லத்துரை அப்துல்லா சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

  முதல் பரிசாக ரூ. 20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai