சுடச்சுட

  
  spt7

  சங்ககிரி, மே 28: சேலம் மாவட்டம், சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா தங்கக் கோப்பைக்கான மாநில அளவிலான கபடிப் போட்டியில் ஆடவர் பிரிவில் திருச்சி அணியும், மகளிர் பிரிவில் திண்டுக்கல் அணியும் வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றன.

  அரையிறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் கன்னியாகுமரி அணி 19-16 என்ற புள்ளிக்கணக்கில் ஈரோடு அணியையும், திருச்சி அணி பெரம்பலூரையும் (25-7) தோற்கடித்து இறுதிப் போட்டியில் நுழைந்தன.

  மகளிர் பிரிவில் திண்டுக்கல் அணி 30-16 என்ற புள்ளிக்கணக்கில் கன்னியாகுமரியை வெற்றி கண்டது. சேலம் அணி ஈரோட்டை (32-20) தோற்கடித்தது.

  திருச்சி, திண்டுக்கல் அணிகள் வெற்றி: இறுதிப் போட்டியில் ஆடவர் பிரிவில் திருச்சி அணி 15-9 என்ற புள்ளிக்கணக்கில் கன்னியாகுமரியைத் தோற்கடித்தது.

  மகளிர் பிரிவில் திண்டுக்கல் அணி சேலத்தை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

  ஜி.கோபாலன், டி.ஆர்.குமாரசாமி, அண்ணாதுரை ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.

  பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மாநில அமெச்சூர் கபடி கழக இணைச் செயலர் ஆர்.சாமியப்பன் தலைமை வகிக்தார்.

  மாநில அமெச்சூர் கபடி கழகத் தலைவர் சோலை எம்.ராஜா, பொதுச்செயலர் எ.சபியுல்லா, தொழிலதிபர்கள் ஆர்.சிவக்குமார், எ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் தங்கக் கோப்பைகளை வழங்கினர்.

  விழாவில், சங்கத்தின் சேலம் மாவட்ட இணைச் செயலர் வி.பி.ராஜா, பொருளாளர் எம்.புலேந்திரன், தெற்கு ரயில்வே ஜூனியர் தேசிய கபடி வீரர் ஜி.முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ஆடவர் பிரிவில் திருச்சி அணியின் 12 வீரர்களுக்கும் தலா அரை பவுன் தங்கக் காசும், 2-ம் பிடித்த கன்னியாகுமரி அணியினருக்கு தலா கால் பவுன் தங்கக் காசும், 3-வது, 4-வது இடம்பிடித்த அணிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் வழங்கப்பட்டன.

  மகளிர் பிரிவில் வென்ற திண்டுக்கல் அணியின் 12 வீராங்கனைகளுக்கும் தலா கால் பவுன் தங்கக் காசும், 2-வது இடம் பிடித்த சேலம் அணியினருக்கு தலா ஒரு கிராம் தங்கக் காசும், 3-வது, 4-வது இடம் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai