சுடச்சுட

  

  கொல்கத்தா, மே 29: ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் பிரமாண்ட பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

  மேற்கு வங்க அரசு, கொல்கத்தா மாநகராட்சி, மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  திறந்த பஸ்ஸில் ஊர்வலம்: பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹம்ஸா பகுதியில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து இரண்டு திறந்த வாகனங்களில் வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் புறப்பட்டது.

  திறந்த பஸ்ஸில் நைட் ரைடர்ஸ் வீரர்களும், மற்றொரு வாகனத்தில் நடனக்குழுவினரும் வந்தனர். அங்கிருந்து ஈடன் கார்டன் மைதானம் வரையிலான 5 கி.மீ. தொலைவில் சாலையின் இரு புறங்களிலும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்து வீரர்களை வரவேற்றதோடு, பூச்செண்டுகளை வீரர்கள் மீது வீசி பாராட்டு தெரிவித்தனர். அதேநேரத்தில் ஊர்வலத்தில் ஷாரூக் கான் பங்கேற்காதது ஏமாற்றமாக அமைந்தது.

  குவிந்த ரசிகர்கள்: ஈடன் கார்டனை நோக்கி ஊர்வலம் வந்தபோது பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த பாராட்டு விழாவிற்கு ரசிகர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் உடை நிறமான பர்பிள் வண்ணதித்லேயே உடையணிந்து வந்திருந்தனர். பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தது கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தை நினைவுபடுத்துவதாக அமைந்தது.

  வீரர்கள் ஈடன் கார்டனுக்குள் நுழைந்தபோது மினி கொல்கத்தாவே அவர்களை வரவேற்பதுபோல் இருந்தது. 67 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட மைதானம் முழுவதும் நிரம்பியிருந்ததே அதற்குக் காரணம். நிகழ்ச்சியைக் காண்பதற்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலையிலேயே ரசிகர்கள் மைதானத்துக்கு வந்துவிட்டனர்.

  அதிரடி இசை நிகழ்ச்சி: நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்று ராட்சத பதாகைகளும் மைதானத்தின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெற்றிக் கொண்டாட்டம் காலை 10.30 மணிக்கு அதிரடி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் பெரும்பாலும் ஷாரூக் கானின் "ஹிட்' பாடல்கள் இசைக்கப்பட்டன. வீரர்கள் ஊர்வலத்தை முடித்து மைதானத்திற்குள் வந்ததும் கொண்டாட்டம் களைகட்டியது. ஷாரூக் கான், ஜூஹி சாவ்லா, வீரர்கள் என அனைவரும் நடனமாடி அசத்தினர். கடுமையான வெயில் கொளுத்தியபோதும், அதை பொருட்படுத்தாது ரசிகர்கள் பாராட்டு விழாவை கண்டுகளித்தனர்.  திறந்த பஸ்ஸில் ஊர்வலம் வந்த வீரர்களுக்கு வழிநெடுகிலும் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு.

  உற்சாக வரவேற்பு: முன்னதாக நைட் ரைடர்ஸ் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு வந்திறங்கியபோதும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேள தாளம் முழங்க வீரர்கள் வரவேற்கப்பட்டனர். மேற்கு வங்க அமைச்சர்கள், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள், மேற்கு வங்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் நைட் ரைடர்ஸ் அணியை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.  மம்தா பாராட்டு!  பாராட்டு விழாவின்போது உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்த கொல்கத்தா அணி உரிமையாளர்கள் ஷாரூக் கான், ஜூஹி சாவ்லா.

  வெற்றிக் கொண்டாட்ட ஊர்வலம் மைதானத்திற்கு செல்லும் வழியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் அலுவலகமான "ரைட்டர்ஸ்' கட்டடம் அருகே வந்தபோது, அங்கு முதல்வர் மம்தாவால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  அணியின் கேப்டன் கௌதம் கம்பீர், அணி வீரர்கள், உரிமையாளர்களான ஷாரூக் கான், ஜூஹி சாவ்லா ஆகியோருக்கு பூச்செண்டு மற்றும் சால்வைகளை வழங்கி கௌரவித்தார். அதன்பிறகு வீரர்கள், ஷாரூக்கான் ஆகியோருடன் கோப்பையை வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மம்தா, அவர்களைப் பாராட்டிப் பேசினார். அங்கு நடைபெற்ற 13 நிமிட நிகழ்ச்சிக்குப் பிறகு வீரர்களுடன் மம்தாவும் திறந்தவெளி பஸ்ஸில் மைதானத்திற்கு சென்றார். கொல்கத்தா அணியின் உடை நிறமான பர்பிள் (ஊதா) வண்ணத்தில் கரை வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற உடையணிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் மம்தா.

  போலீஸ் தடியடி  ஈடன் கார்டனுக்கு வெளியில் போலீஸார்  தடியடி நடத்தியபோது கலைந்து ஓடும் ரசிகர்கள்.

  ஏற்கெனவே மைதானம் நிரம்பிவழிந்ததால், சுமார் 30 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியில் காத்திருந்தனர். பாராட்டு விழா நிறைவுறும் வேளையில், நைட் ரைடர்ஸ் வீரர்களைக் காணும் ஆவலில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.

  இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் பலர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் ரசிகர்கள் விட்டுச் சென்ற காலணிகளாகவே காட்சியளித்தன. இருப்பினும் இதுதொடர்பாக போலீஸார் மறுத்துள்ளனர். தடியடி நடத்தவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai