சுடச்சுட

  
  spt4

  சென்னை, மே 30: மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்கினாலும், மழையால் சந்தோஷ் டிராபியை இழந்தோம் என்று தமிழக கால்பந்து அணியின் பயிற்சியாளர் சபீர் பாஷா (படம்) தெரிவித்தார்.

  ஒடிசா மாநிலம் கட்டக்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற சந்தோஷ் டிராபி போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 2-3 என்ற கணக்கில் சர்வீசஸ் அணியிடம் தோல்வி கண்டது.

  மழையோடு போராடினோம்: இது தொடர்பாக தமிழக கால்பந்து அணியின் பயிற்சியாளர் சபீர் பாஷா கூறியது:

  மழை மட்டும் பெய்யாதிருந்தால் சந்தோஷம் டிராபியை தமிழகத்துக்கு கொண்டு வந்திருப்போம். சர்வீசஸ் அணி நாடு முழுவதும் உள்ள 11 வீரர்களை உள்ளடக்கிய பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், அவர்களை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு தமிழக வீரர்கள் இருந்தனர். ஆனால் இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக மழை பெய்தது தமிழக அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

  தமிழக வீரர்கள் ஈரப்பதமான மைதானங்களில் விளையாடிய பழக்கம் இல்லாதவர்கள். அதேநேரத்தில் சர்வீசஸ் அணியோ பெங்களூர் மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற பயிற்சி முகாம்களின்போது மழையிலும் விளையாடி பழக்கப்பட்டிருந்தது.

  போட்டி தொடங்கியபோது, தமிழக வீரர்கள் சர்வீசஸ் அணி வீரர்களுடன் போராடினார்கள் என்று சொல்வதைவிட, மழையோடும், ஈரப்பதமான மைதானத்தோடும் போராடினார்கள் என்றுதான் கூற வேண்டும்.

  கீழே விழுந்தனர்: தமிழக வீரர்கள் கால் வழுக்கி விழுந்து கொண்டேயிருந்தார்கள். ஆனால் சர்வீசஸ் அணி வீரர்களோ எவ்வித பிரச்னையுமின்றி எளிதாக பந்தை கடத்திச் சென்றனர். இதனால் அவர்கள் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்தனர்.

  இதன்பிறகு சரிவிலிருந்து மீண்ட தமிழக வீரர்கள் கடுமையாகப் போராடி 2 கோல் அடித்தனர். கூடுதலாக 5 நிமிட காலஅவகாசம் இருந்திருக்குமானால், நிச்சயம் தமிழக வீரர்கள் 3-வது கோலை அடித்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பார்கள்.

  இந்த முறை மழையால் தோற்றிருந்தாலும், அடுத்த முறை வருவோம், நிச்சயம் வெல்வோம் என்பதை மற்ற அணிகளுக்கு தமிழக வீரர்கள் உணர்த்திவிட்டு வந்திருக்கிறார்கள்.

  திட்டமிட்டு செயல்பட்டோம்: தகுதியான வீரர்களைத் தேர்வு செய்தது, சரியான பயிற்சி, வீரர்களின் கடுமையான உழைப்பு ஆகியவையே தமிழக அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியதற்கு முக்கியக் காரணம். சந்தோஷ் டிராபி போட்டியில் பெயரளவிற்கு ஆடினால் போதாது, கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையை வீரர்களின் மனதில் ஏற்படுத்தினோம். போட்டியின்போது ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும், அவர்களின் வேலை என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அணி ஒரு ராணுவம் போலவே இருந்தது.

  உத்வேகம்: போட்டியின் தொடக்கத்தில் சாதிப்போமா என்பது எங்களுக்குத் தெரியாவிட்டாலும், நாங்கள் வகுத்த திட்டங்களையும், உத்திகளையும் வீரர்கள் சரியாக செயல்படுத்தினர்.

  நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல உத்வேகத்தோடு ஆடினார்கள். அதனாலேயே வெற்றி சாத்தியமானது. இறுதி ஆட்டத்துக்கு முன்னதாகக் கூட இறுதி ஆட்டம் என்று நினைத்து விளையாட வேண்டாம். அடுத்த ஆட்டத்தில் விளையாடுகிறோம் என நினைத்துக் கொண்டு பதற்றமின்றி விளையாடுங்கள் என்று கூறி வீரர்களை மனதளவிலும் தயார்படுத்தியிருந்தோம்.

  கால்பந்துக்கு தனி மைதானம்: மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரையில் கால்பந்துக்கு என தனியாக மைதானங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரே மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட் என பல்வேறு விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

  அதனால் இங்கு மழை பெய்துவிட்டால், அதில் வீரர்கள் விளையாடும்போது மைதானம் சேதமாகிவிடும் என்று கூறி விளையாட அனுமதிப்பதில்லை. அத்தகைய நிலை மாற வேண்டும். கால்பந்துக்கு என தனி மைதானம் வேண்டும் என்றார். பயிற்சியளர் சபீர் பாஷா இந்திய கால்பந்து அணிக்காக 8 ஆண்டுகளில் 68 ஆட்டங்களில் விளையாடியவர். சந்தோஷ் டிராபி போட்டியில் 10 ஆண்டுகள் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  ரூ.50 ஆயிரம் பரிசு: முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலையில் சென்னை திரும்பிய தமிழக அணியினருக்கு தமிழக கால்பந்து சங்க தலைவர் மொஹைதீன் தலைமையிலான நிர்வாகிகள் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.50 ஆயிரத்துக்கு குறையாமல் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்றும் முஹைதீன் உறுதியளித்தார்.

  தமிழக அணி 1973-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற சந்தோஷ் டிராபி போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது. அதன்பிறகு 40 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai