சுடச்சுட

  
  spt2

  மாஸ்கோ, மே 30: 5-வது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் விஸ்வநாதன் ஆனந்த்.

  தொடர்ச்சியாக 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னர் 2000, 2007, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் அவர் பட்டம் வென்றுள்ளார்.

  புதன்கிழமை நடைபெற்ற ரேபிட் செஸ் டைபிரேக்கர் சுற்றில் ஆனந்த் 2.5-1.5 என்ற கணக்கில் இஸ்ரேலின் போரீஸ் கெல்ஃபான்டை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

  ரஷிய தலைநகர் மாஸ்கோவில் 3 வார காலமாக நடைபெற்ற இந்தப் போட்டியின் 12 சுற்றுகளும் திங்கள்கிழமை முடிவடைந்தன. அப்போதும் இருவரும் 6-6 என்ற கணக்கில் சமநிலை பெற்றனர்.

  இதையடுத்து வெற்றியைத் தீர்மானிப்பதற்கான ரேபிட் செஸ் டைபிரேக்கர் சுற்று புதன்கிழமை நடைபெற்றது.

  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளான இந்த டைபிரேக்கர் சுற்றின் முதல் கேம் 33-வது நகர்த்துதலோடு டிராவில் முடிந்தது.

  பின்னர் நடைபெற்ற 2-வது கேமின் 77-வது நகர்த்துதலில் கெல்ஃபான்டை வீழ்த்தினார் ஆனந்த்.

  டை பிரேக்கர் சுற்றின் அடுத்த இரு கேம்களும் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து ஆனந்த் 2.5-1.5 என்ற கணக்கில் கெல்ஃபான்டை வீழ்த்தி 5-வது முறையாக உலகச் சாம்பியன் ஆனார்.

  இந்தப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ.14 கோடியே 28 லட்சம்.

  இதில் ரூ. 7கோடியை 84 ஆயிரம் ஆனந்துக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகை கெல்ஃபான்டுக்கு வழங்கப்படும்.

  2007-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆனந்த் உள்பட 9 பேர் பங்கேற்றனர். அதில் ஆனந்த் பட்டம் வென்றார். 2008-ல் ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக்கையும், 2010-ல் பல்கேரியாவின் வேஸலினையும் வீழ்த்தி ஆனந்த் பட்டம் வென்றார்.

  பிரதமர் வாழ்த்து: 5-வது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

  எதிர்காலத்தில் இதுபோன்ற சாதனைகளை தொடர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிலும் குறிப்பாக விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு ஆனந்த் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.

  தன்னுடைய அளப்பரிய சாதனையால் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்' என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

  "இறுக்கம் தளர்ந்தது'

  சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டுள்ளேன் என்று உலகச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

  வெற்றிக்குப் பிறகு அவர் மேலும் கூறியது: இறுக்கத்தில் இருந்து மீண்டு இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். மிகப்பெரிய அளவிலான நெருக்கடியில் இருந்தேன்.

  காலையில் எழும்போது, யாரோ ஒருவர் வெற்றிபெறுவோம் என்று தெரியும். ஆனால் அது எப்படி நடக்கும் என்று தெரியாது. டை பிரேக்கர் சுற்று எப்படி போகும் என்பது பற்றிய யோசனையே இல்லை. ஆனால் இப்போது என்னைச் சுற்றியிருந்த இறுக்கம் தளர்ந்துவிட்டது என்றார்.

  பெரும் மகிழ்ச்சி

  ஆனந்தின் மனைவி அருணா கூறுகையில், "இது மிகுந்த சவால் நிறைந்த ஆட்டம். இருப்பினும் எனது கணவர் வெற்றிபெற்றது மகிழ்ச்சியே.

  டை பிரேக்கர் சுற்றைப் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம். ஆனந்தும், கெல்ஃபான்டும் செஸ் போட்டியில் நீண்ட காலமாக கடும் போட்டியாளர்களாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்கள். எவ்வளவு கடினமாக இருவரும் பயிற்சி பெற்றிருப்பார்கள் என்பதை இந்தப் போட்டியைப் பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள்' என்றார்.

  வாழ்வின் பெருமை மிகு தருணம்!

  சென்னையில் உள்ள விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை விஸ்வநாதன் அய்யர் கூறுகையில், "என்னுடைய மகன் ஆனந்த் 5-வது முறையாக உலகச் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது வாழ்வின் பெருமை மிகு தருணம். ஆனந்த் பட்டம் வென்றதில் உணர்வுபூர்வமாகவே மிகுந்த பெருமையடைகிறேன். செஸ் உலகின் சிறந்த வீரரான கெல்ஃபான்டை ஆனந்த் வீழ்த்தியுள்ளார். இது தனித்தன்மை வாய்ந்த சாதனை' என்றார்.

  ஆனந்த் குழந்தையாக இருந்தது முதல் செஸ் போட்டியில் உச்சத்திற்கு வரும் வரை அவருக்கு ஆலோசகராக இருந்து வழி நடத்தியவர் அவருடைய தாயார் சுசீலா விஸ்வநாதன். அவரிடம் இப்போதும் நீங்கள்தான் ஆனந்தின் ஆலோசகரா என்று கேட்டபோது, அது பல ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது இல்லை' என்றார்.

  ஆனந்தின் மகனும் ஆனந்தைப் பின்பற்றி செஸ் போட்டியில் களமிறங்குவாரா என்று கேட்டபோது, "அதை அவனுடைய பெற்றோர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai