Enable Javscript for better performance
சென்னை ஓபன் டென்னிஸ்: டிசம்பர் 31இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை ஓபன் டென்னிஸ்: டிசம்பர் 31இல் தொடக்கம்

    By dn  |   Published on : 23rd November 2012 05:12 AM  |   அ+அ அ-   |    |  

    பதினெட்டாவது ஏடிபி ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி டிசம்பர் 31ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் தொடங்குகிறது. ஜனவரி 6ஆம் தேதி நிறைவடைகிறது.

    இப் போட்டியில் இந்திய வீரர் சோம்தேவுக்கு வைல்டுகார்ட் (நேரடித்தகுதி) கொடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிச்சுற்று வரை முன்னேறிய சோம்தேவ், தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சென்னை ஓபனில் இருந்து கடைசி நேரத்தில் விலகினார்.

    சர்வதேச தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ள செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச், 9ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச், 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ளவருமான குரோஷியாவின் மரின் சிலிச், 2011ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவரும், தரவரிசையில் 17ஆவது இடத்தில் உள்ளவருமான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகிய முன்னணி வீரர்கள் இப் போட்டியில் பங்கேற்கின்றனர். இப் போட்டியில் விளையாட தரவரிசை அடிப்படையில் 22 வீரர்கள் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளனர். இப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ.2.5 கோடியாகும்.

    பயஸ்,பூபதி, போபண்ணா: தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் ஏ.எம். அழகப்பன் சென்னையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது. சர்வதேச தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ள 4 வீரர்கள் பங்கேற்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

    இப் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இவர்கள் மூவரும் வெவ்வேறு வீரர்களுடன் இணைந்து களமிறங்குகின்றனர். போபண்ணா, அமெரிக்க வீரர் ராஜீவ் ராமுடன் ஜோடி சேர்கிறார். போபண்ணாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. எனினும் சென்னை ஓபனில் விளையாடுவதாக உறுதியளித்துள்ளார்.

    காயத்தால் சோம்தேவ் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதனால் அவருக்கு வைல்கார்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு வைல்டுகார்டை யாருக்கு வழங்குவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்' என்றார்.

    அப்போது தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் நஜிமுதீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் ராஜாராமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    நடப்புச் சாம்பியன் ரயோனிக் இல்லை
    கடந்த சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற "ஏஸ் ஸ்பெஷலிஸ்ட்டான' கனடாவின் மிலஸ் ரயோனிக் இந்த முறை பங்கேற்கவில்லை. அவர் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில் பங்கேற்கவிருப்பதால் இதில் கலந்துகொள்ளவில்லை. கடந்த முறை இறுதிச்சுற்றில் 3 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியனானார் ரயோனிக்.

    kattana sevai