Enable Javscript for better performance
பெர்த் டெஸ்டுடன் பாண்டிங் ஓய்வு- Dinamani

சுடச்சுட

    

    பெர்த் டெஸ்டுடன் பாண்டிங் ஓய்வு

    By dn  |   Published on : 29th November 2012 11:49 PM  |   அ+அ அ-   |    |  

    spt2

    பெர்த்தில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியோடு ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் ஓய்வு பெறுகிறார்.

    இதன்மூலம் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் என்றழைக்கப்படும் பாண்டிங்கின் 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

    பெர்த்தில் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்த பாண்டிங் மேலும் கூறியது: கடந்த சில வாரங்களாக என்னுடைய ஆட்டம் போதுமான அளவுக்கு சிறப்பாக அமையவில்லை. அதனால் நன்றாக சிந்தித்தே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். கிரிக்கெட்டுக்காக என்னையே அர்ப்பணித்துள்ளேன்.

    எனினும் கடந்த 18 மாதங்களாக தொடர்ச்சியாக ரன் குவிக்க முடியவில்லை. எனவே ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நம்புகிறேன். ஓய்வு முடிவை நானாக எடுத்துள்ளேன். தேர்வுக் குழுவினர் ஓய்வுபெறுமாறு என்னை வற்புறுத்தவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், டாஸ்மேனியா அணிக்காக இந்த சீசன் முழுவதும் விளையாடுவேன் என்றார்.

    எதிர்கால திட்டம் பற்றி கேட்டபோது, தனது மனைவி மற்றும் குழந்தைகளை நோக்கி சைகை காண்பித்த பாண்டிங், "கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியவில்லை. எனவே இனி எனது மனைவி, மகள்களுடன் நேரத்தைக் கழிப்பேன்' என்றார்.

    அடுத்த மாதம் 38 வயதை எட்டவுள்ள பாண்டிங் இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41 சதம், 62 அரைசதம் உள்பட 13,366 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் சச்சினுக்கு (15,562) அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் உள்ள பாண்டிங், அதிக சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் சச்சின் (51), காலிஸýக்கு (44) அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் உள்ளார்.

    இந்தியாவுக்கு எதிராக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், 51 இன்னிங்ஸ்களில் 3 இரட்டைச் சதம், 5 சதம், 12 அரை சதங்களை விளாசியுள்ளார். எனினும் இந்திய மண்ணில் அவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 14 டெஸ்ட் போட்டிகளில் 25 இன்னிங்ஸ்களில் ஒரு சதம், 5 அரைசதம் உள்பட 662 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    375 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சதம், 82 அரைசதம் உள்பட 13,704 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் சச்சினுக்கு (18426) அடுத்தபடியாக 2ஆவது இடத்தில் உள்ளார்.

    77 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்துள்ள பாண்டிங், 48இல் வெற்றி தேடித்தந்துள்ளார். இதேபோல் இவர் தலைமையில் 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா 164இல் வாகை சூடியுள்ளது. டெஸ்ட், ஒருநாள் என இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமையும் பாண்டிங்கையே சேரும்.

    ஆஸ்திரேலிய அணியின் சாதனைமிக்க கேப்டனாக திகழ்ந்த பாண்டிங், அந்த அணிக்கு இரு உலகக் கோப்பைகளையும் (2003, 2007) வென்று தந்துள்ளார்.

    எனினும் 2011 உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோற்றதையடுத்து அவரின் கேப்டன் பதவி பறிபோனது. இதன்பிறகு அவரால் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த பிப்ரவரியில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார்.

    வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் மூன்று முறை தோற்ற ஒரே கேப்டன் பாண்டிங்தான். 2010-11இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் படுதோல்வி கண்டதுதான் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா கண்ட மிக மோசமான தோல்வி. 24 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது அதுவே முதல்முறை.

    பாண்டிங் ஓய்வு முடிவை அறிவித்தபோது, அவருடன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் இருந்தனர். பாண்டிங்கின் மனைவி மற்றும் இரு மகள்களும் உடனிருந்தனர்.

     

    பெர்த் டூ பெர்த்

     

    கடந்த 1995 ஆம் ஆண்டு டிசம்பரில் பெர்த்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாண்டிங், இப்போது அதே பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறப் போகிறார்.

    இதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகி, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெறுகிறார்.

     

    168 டெஸ்ட்

     

    இதுவரை 167 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாண்டிங், பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியர்கள் வரிசையில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹுடன் (168 டெஸ்ட்) முதலிடத்தைப் பகிர்ந்து கொள்வார்.

    kattana sevai