Enable Javscript for better performance
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை- Dinamani

சுடச்சுட

    

    இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை

    By dn  |   Published on : 04th October 2012 11:20 PM  |   அ+அ அ-   |    |  

    spt2

    இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இலங்கை.

    முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

    கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் ஜெயவர்த்தனாவும், தில்ஷானும் இலங்கையின் இன்னிங்ûஸத் தொடங்கினர். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசியதால், ஜெயவர்த்தனா அவ்வப்போது "ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை' ஆடினார். ஆனால் மறுமுனையில் தில்ஷனால் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 62 ரன்களே எடுக்க முடிந்தது.

    11-வது ஓவரில் ஜெயவர்த்தனா ஆட்டமிழந்தார். அப்ரிதியின் பந்துவீச்சில் அவர் "ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்' அடிக்க, அது ராஸô ஹசன் கையில் தஞ்சம் புகுந்தது. 36 பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து களமிறங்கிய குமார் சங்ககாரா, வந்த வேகத்தில் 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனாலும் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பிறகு தில்ஷானுடன் இணைந்தார் ஜீவன் மெண்டிஸ். முக்கியமான கட்டத்தில் இந்த ஜோடி ஆமை வேகத்தில் ஆடியது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து 5 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தில்ஷான் 43 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். 18 பந்துகளைச் சந்தித்த ஜீவன் மெண்டிஸ் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    கடைசிக் கட்டத்தில் திசாரா பெரெரா-மேத்யூஸ் ஜோடி சற்று வேகம் காட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது இலங்கை. கடைசி ஓவரில் மட்டும் அந்த அணிக்கு 16 ரன்கள் கிடைத்தது. பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல், அப்ரிதி, ஹபீஸ், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    பாகிஸ்தான் தோல்வி: பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் முகமது ஹபீஸூம், இம்ரான் நசிரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இலங்கையின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால், சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியவில்லை. இதனால் அந்த அணியால் முதல் 5 ஓவர்களில் 26 ரன்களே எடுக்க முடிந்தது.

    அஜந்தா மெண்டிஸ் வீசிய அடுத்த ஓவரில் இம்ரான் நசிர் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்தார்.

    இதன்பிறகு பாகிஸ்தான் சரிவுக்குள்ளானது. பின்னர் வந்த ஜம்ஷெத் 4, கம்ரான் அக்மல் 1, ஷோயிப் மாலிக் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 11 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களை எடுத்து பாகிஸ்தான் தடுமாறியது.

    இதையடுத்து முகமது ஹபீஸூடன் இணைந்தார் உமர் அக்மல். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 27 ரன்கள் சேர்த்தது. ஹபீஸ் 40 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அப்ரிதி, தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டு ஆனார்.

    பின்னர் உமர் அக்மலுடன் இணைந்தார் சோஹைல் தன்வீர். இதன்பிறகு பாகிஸ்தான் வெற்றிபெற கடைசி 3 ஓவர்களில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அஜந்தா மெண்டிஸ் வீசிய 18-வது ஓவரில் சோஹைல் தன்வீர் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. உமர் அக்மல் 29, உமர் குல் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இலங்கைத் தரப்பில் ரங்கனா ஹெராத் 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 2-வது அரையிறுதி ஆட்டம் கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அதில் வெற்றிபெறும் அணி, கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இலங்கையுடன் மோதும்.

    kattana sevai