சுடச்சுட

    
    spt2

    பெங்களூர், ஆக. 31: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ராஸ் டெய்லர் 113 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.

    கப்டில், மெக்கல்லம் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். 2-வது ஓவரிலேயே நியூஸிலாந்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜாகீர்கான் வீசிய பந்தில் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காத நிலையில், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

    ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே நியூஸிலாந்து முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து வில்லியம்சன் களமிறங்கினார். முதல் ஆட்டத்தில் அவர் ஓரளவுக்கு சிறப்பாக விளையாடி இருந்ததால், அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 17 ரன்களில் ஓஜா பந்து வீச்சில் அவர் பெவிலியன் திரும்பினார். அப்போது நியூஸிலாந்தின் ஸ்கோர் 63 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் ராஸ் டெய்லர் களமிறங்கினார்.

    அரைசதம் கடந்த கப்டில் 53 ரன்களில் ஓஜா பந்தில் கம்பீரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து ஃபிளைன் ஆட்டத்தைத் தொடர்ந்தார். உணவு இடைவேளையின்போது நியூஸிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.

    ஆட்டத்தை மாற்றிய டெய்லர்: ஃபிளைன், டெய்லர் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அதுவரை இந்திய வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. ஃபிளைன் - டெய்லர் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் எடுத்துச் சென்றனர். சிறப்பாக விளையாடிய டெய்லர் 46 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

    நியூஸிலாந்தின் ஸ்கோர் 196 ஆக இருந்தபோது ஃபிளைன் ஆட்டமிழந்தார். அவர் 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய பிராங்ளின் 8 ரன்களுடன் வெளியேறினார்.

    அடுத்து டெய்லருடன், வெய்க் ஜோடி சேர்ந்தார். இதனிடையே அதிரடியாக விளையாடிய டெய்லர் 99 பந்துகளில் சதமடித்தார்.

    இதனால் நியூஸிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. ஸ்கோர் 246 ஆக இருந்தபோது டெய்லர் ஆட்டமிழந்தார். அவர் 127 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடங்கும்.

    அடுத்து வெய்க்குடன் ஜோடி சேர்ந்த பிராஸ்வெல் சிறப்பாக விளையாடினார். இந்திய கேப்டன் தோனி பந்து வீச்சை பல முறை மாற்றியும் பலன் கிடைக்கவில்லை. 60 பந்துகளை எதிர்கொண்ட வெய்க் அரைசதம் கடந்தார். இதனால் நியூஸிலாந்து 300 ரன்களைக் கடந்தது.

    வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தம்: 81.3 ஓவர்களில் நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் முதல் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெய்க் 63 ரன்களுடனும், பிராஸ்வெல் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இருவரும் 7-வது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 82 ரன்கள் எடுத்துள்ளனர்.

    ஓஜா 4 விக்கெட்: இந்தியத் தரப்பில் ஓஜா 4 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வின், ஜாகீர் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். உமேஷ் யாதவுக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

    நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், கேப்டன் டெய்லரின் சிறப்பான ஆட்டத்தால் மீண்டது. பின்வரிசையில் வெய்க், பிராஸ்வேல் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினர்.

    சனிக்கிழமை 2-வது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் விரைவில் விக்கெட்டை வீழ்த்தினால், ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக அமையும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai