சுடச்சுட

    
    sptt3

    நியூயார்க், செப்.4: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் தொடர்ந்து 8-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ள முர்ரே, அடுத்ததாக தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கவுள்ளார். முர்ரேவும், சிலிச்சும் இதுவரை 7 முறை மோதியுள்ளனர். இதில் 6 முறை முர்ரே வெற்றி கண்டுள்ளார்.

    முன்னதாக மரின் சிலிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் மார்ட்டின் கிளிஸôனை வீழ்த்தினார்.

    மார்டி பிஷ் விலகல்: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரோஜர் ஃபெடரரும், அமெரிக்காவின் மார்டி பிஷ்ஷும் மோதவிருந்தனர். மார்டி பிஷ்ஷுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகினார். இதனால் களமிறங்காமலேயே காலிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர். இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் காலிறுதிச் சுற்றுக்கு தொடர்ச்சியாக 34 முறை முன்னேறியவர் என்ற பெருமையைப் பெற்றார் ஃபெடரர். மொத்தத்தில் இப்போது 38-வது கிராண்ட் ஸ்லாம் காலிறுதியில் விளையாடவுள்ளார் ஃபெடரர். இன்னும் 4 கிராண்ட் ஸ்லாம் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்பட்சத்தில் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் காலிறுதியில் அதிக முறை விளையாடியவரான அமெரிக்காவின் ஜிம்மி கார்னரின் (41 முறை) சாதனையை தகர்த்துவிடுவார் ஃபெடரர்.

    ஃபெடரர் தனது காலிறுதிச் சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை சந்திக்கிறார். இதுவரை இவர்கள் இருவரும் 15 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெடரர் 11 முறை வெற்றி கண்டுள்ளார்.

    முன்னதாக தாமஸ் பெர்டிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (4), 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் நிகோலஸ் அல்மாக்ரோவை வீழ்த்தினார்.

    செரீனா, சாரா வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-0 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் ஆன்ட்ரியாவை வீழ்த்தினார். இதன்மூலம் 10-வது முறையாக அமெரிக்க ஓபன் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் செரீனா.

    செரீனா தனது காலிறுதிச் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிச்சை சந்திக்கிறார். இவானோவிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் பல்கேரியாவின் பைரன்கோவாவை வீழ்த்தினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் சாரா எர்ராணி சக நாட்டு வீராங்கனையான ராபர்ட்டா வின்ஸியை சந்திக்கவுள்ளார். சாரா எர்ராணி 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தார்.

    அக்னீஸ்காவுக்கு அதிர்ச்சி: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராபர்ட்டா வின்ஸி 6-1, 6-4 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

    பயஸ், சானியா ஜோடிகள் தோல்வி

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் சானியா மிர்சா ஜோடிகள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறின.

    காலிறுதிச் சுற்றில் லியாண்டர் பயஸ்-ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடி 6-7, 5-7 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் லூஸி ரடேகா-ஃபிரான்டிசெக் செர்மார்க் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

    எதிர்ஜோடியைவிட பயஸ் ஜோடி சிறப்பாக விளையாடியபோதும், அவ்வப்போது செய்த தவறுகளால் வெற்றிவாய்ப்பை இழந்தது. 1 மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த ஆட்டம் நடைபெற்றது.

    சானியா ஜோடி தோல்வி: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சானியா மிர்சா-பிரிட்டனின் காலின் ஃபிளெம்மிங் ஜோடி 3-6, 5-7 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் வீட்டா பெஸ்க்கே-போலந்தின் மார்சின் மட்கோவ்ஸ்கி ஜோடியிடம் வீழ்ந்தது.

    பலம் வாய்ந்த வீட்டா-மார்சின் ஜோடியின் ஆட்டத்துக்கு சானியா ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 69 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai