சுடச்சுட

  

  தொடரை வென்றது ஆஸ்திரேலியா: கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

  Published on : 26th September 2012 11:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt6

  சார்ஜா, செப்.4: பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

  இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா.

  சார்ஜாவில் திங்கள்கிழமை நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 47 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தானுக்கு முகமது ஹபீஸ்-நாசிர் ஜாம்ஷெத் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 26.3 ஓவர்களில் 129 ரன்கள் குவித்தது. 75 பந்துகளைச் சந்தித்த நாசிர் ஜாம்ஷெத் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  தொடக்கம் சிறப்பாக அமைந்ததால் பாகிஸ்தான் வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வந்தவர்கள் விரைவாக வெளியேறியதால் ரன் வேகம் குறைந்தது. அப்ரிதி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 97 பந்துகளைச் சந்தித்த ஹபீஸ் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆசாத் ஷபிக் 27, உமர்

  அக்மல் 0, மிஸ்பா உல் ஹக் 25, கம்ரான் அக்மல் 2 ரன்களில் வெளியேறினர். இறுதியில் அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்தது. அசார் அலி 27, அப்துர் ரெஹ்மான் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்ச் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ஆஸ்திரேலியா வெற்றி: 245 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 21 (1 சிக்ஸர், 3 பவுண்டரி), கிளார்க் 32 (4 பவுண்டரி), டேவிட் ஹசி 43 (3 சிக்ஸர்), ஜார்ஜ் பெய்லி 1 ரன்னில் வெளியேற 4 விக்கெட் இழப்புக்கு 108 என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.

  இதையடுத்து மைக் ஹசியுடன் இணைந்தார் மேத்யூ வேட். இந்த ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது ஆஸ்திரேலியா. இவர்களிருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தனர். 46 பந்துகளைச் சந்தித்த மேத்யூ வேட் 22 ரன்கள் எடுத்திருந்தபோது அப்துர் ரெஹ்மான் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

  இதையடுத்து கிளென் மேக்ஸ்வெல் களம்புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மைக் ஹசி ஒருநாள் போட்டியில் 39-வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். ஹசி நிதானமாக விளையாடினாலும், மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தைத் தடுக்க முடியவில்லை. அந்த அணி 226 ரன்களை எட்டியபோது மைக் ஹசி போல்டு ஆனார். 72 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

  பின்னர் வந்த கிறிஸ்டியான் 2 ரன்களில் வெளியேற, ஜான்சன் களம் கண்டார். 47-வது ஓவரின் கடைசிப் பந்தில் மேக்ஸ்வெல் சிக்ஸர் அடிக்க 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மேக்ஸ்வெல் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், ஜான்சன் 1 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  பாகிஸ்தான் தரப்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டுகளையும், ஹபீஸ், அப்துர் ரெஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மைக் ஹசி ஆட்டநாயகனாகவும், மிட்செல் ஸ்டார்ச் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

  இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  பீல்டிங் மோசம்: இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங் மிக மோசமாக அமைந்தது. அதனால் 4 கேட்சுகளை கோட்டைவிட்டனர். மோசமான கீப்பிங் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டு நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய கம்ரான் அக்மல் ஒரு ஸ்டெம்பிங் வாய்ப்பை வீணடித்தார்.

  20 ஆண்டுகளில்... ஆசிய ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சை சமாளிப்பதில் ஆஸ்திரேலியா பலவீனமான அணி என்று கருதப்பட்டாலும், கடந்த 20 ஆண்டுகளில் ஆசிய ஆடுகளங்களில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் ஒன்றை மட்டுமே இழந்துள்ளது. 2010-ல் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியாவிடம் இழந்துள்ளது ஆஸ்திரேலியா. மற்றபடி எல்லா தொடர்களிலும் வெற்றி கண்டுள்ளது.

  ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் அடுத்ததாக 3 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடுகின்றன. முதல் ஆட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 5) நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் வரும் 7-ம் தேதியும், 3-வது ஆட்டம் வரும் 10-ம் தேதியும் நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai