சுடச்சுட

  
  spt2

  நியூயார்க், செப்.5: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு பெலாரஸின் விக்டோரியா அசரென்கா (படம்) முன்னேறியுள்ளார்.

  காலிறுதியில் அசெரன்கா 6-1, 4-6, 7-6 (5) என்ற செட் கணக்கில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசரை வீழ்த்தினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

  செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் காலிறுதியில் முதல் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா, தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சமந்தா ஸ்டோசர் ஆகியோர் மோதினர். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றினார் அசரென்கா. பின்னர் நடைபெற்ற 2-வது செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாகப் போராடினர். இருப்பினும் கடும் போராட்டத்துக்குப் பிறகு 2-வது செட்டை 6-4 என்ற கணக்கில் சமந்தா ஸ்டோசர் கைப்பற்ற, ஆட்டம் 3-வது செட்டுக்கு சென்றது.

  இந்த செட்டிலும் இருவரும் அபாரமாக ஆடியதால் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க "டை-பிரேக்கர்' வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த செட்டில் ஆரம்பத்தில் அபாரமாக ஆடிய அசரென்கா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

  இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட சமந்தா, அசரென்காவின் அடுத்தடுத்த சர்வீஸ்களை முறியடித்தார். இதனால் ஒரு கட்டத்தில் இருவரும் 5-5 என்ற நிலையை எட்டினர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இரு கேம்களும் அசரென்காவின் வசமானது. இதனால் 7-5 என்ற கணக்கில் "டை-பிரேக்கர்' செட்டை அசரென்கா வென்றார். இதனால் 3-வது செட் 7-6 (5) என்ற கணக்கில் அசரென்கா வசமானது.

  அசரென்கா தனது அரையிறுதியில் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் மரியோன் பர்டோலி அல்லது தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் மோதுவார்.

  காலிறுதியில் ஃபெரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் முன்னேறியுள்ளார். இவர் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 7-6 (2), 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்டு காஸ்கெட்டை வீழ்த்தினார். அவ்வப்போது மழை பெய்ததால், இந்த ஆட்டம் முடிவுக்கு வர 7 மணி நேரத்துக்கும் மேலானது.

  இதுவரை ஃபெரரும், காஸ்கெட்டும் 9 முறை மோதியுள்ளனர். அதில் ஃபெரர் 8 முறை வெற்றி கண்டுள்ளார். டேவிட் ஃபெரர் தனது காலிறுதிச் சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் அல்லது ஜெர்மனியின் பிலிப்புடன் மோதுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai