சுடச்சுட

  
  spt6

  நாட்டிங்காம், செப்.6: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்கா.

  இதனால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. முன்னதாக முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

  இங்கிலாந்தின் டிரென்ட்பிரிட்ஜில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 45.2 ஓவர்களில் 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 34.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலஸ்டார் குக் 51, பேர்ஸ்டோவ் 29, கீஸ்வெட்டர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இறுதியில் 182 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து. அந்த அணியின் வோக்ஸ் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

  தென் ஆப்பிரிக்கா தரப்பில் பீட்டர்சன் 3 விக்கெட்டுகளையும், டேல் ஸ்டெயின், மோர்ன் மோர்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  ஆம்லா 97: பின்னர் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கிரீம் ஸ்மித் 1, டூ பிளெஸ்ஸிஸ் 3, எல்கர் 1 ரன்னில் வெளியேற 3 விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தென் ஆப்பிரிக்கா.

  இதையடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டிவில்லியர்ஸ். இருவரும் தொடக்கம் முதலே வேகமாக விளையாடினர். இதனால் அடுத்தடுத்து அரை சதமடித்தனர். ஆம்லா 63 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 54 பந்துகளிலும் அரைசதம் கண்டனர்.

  இவர்களை வீழ்த்த இங்கிலாந்து பெüலர்கள் கடுமையாகப் போராடியபோதும் கடைசி வரை அது நடக்கவில்லை. டெர்ன்பாச் வீசிய 35-வது ஓவரின் 3-வது பந்தில் ஆம்லா பவுண்டரி அடிக்க 3 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா.

  ஆம்லா 107 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 97 ரன்களும், டிவில்லியர்ஸ் 79 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 2 விக்கெட் எடுத்தார். ஆம்லா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஆட்டங்களிலும் சேர்த்து 335 ரன்கள் குவித்ததன் மூலம் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் ஆம்லா. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆம்லா முச்சதம் உள்பட 482 ரன்கள் குவித்தார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai