சுடச்சுட

  
  spt2

  நியூயார்க், செப்.6: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டார் உலகின் முதல்நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.

  புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 7-6 (1), 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ரோஜர் ஃபெடரரைத் தோற்கடித்தார்.

  அமெரிக்க ஓபனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஃபெடரர், இந்த முறை பட்டம் வென்று 87 ஆண்டுகால அமெரிக்க ஓபன் வரலாற்றில் 6 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்கக் காத்திருந்தார். ஆனால் அதை இப்போது பெர்டிச் தகர்த்துவிட்டார்.

  பெர்டிச் தனது அரையிறுதிச் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை சந்திக்கவுள்ளார்.

  காலிறுதியில் ஜோகோவிச்: புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 4-வது சுற்றில் இரண்டாம் நிலை வீரரரும், நடப்புச் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஆகியோர் மோதினர்.

  இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக வாவ்ரிங்கா போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

  தொடர்ந்து 14-வது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் காலிறுதிக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், அடுத்ததாக ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்டினை சந்திக்கவுள்ளார்.

  அரையிறுதியில் ஷரபோவா: மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ரஷியாவின் மரியா ஷரபோவா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் மரியோன் பர்டோலியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  ஷரபோவா தனது அரையிறுதியில், பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை சந்திக்கிறார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் அசரென்காவிடம் தோல்வி கண்டார் ஷரபோவா. அந்தத் தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஷரபோவா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  செரீனா வெற்றி: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் செர்பியாவின் அனா இவானோவிச்சை தோற்கடித்தார்.

  இதேபோல் இத்தாலியின் சாரா எர்ரானி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் சக நாட்டு வீராங்கனையான ராபர்ட்டா வின்ஸியைத் தோற்கடித்தார்.

  இதன்மூலம் அமெரிக்க ஓபன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

  அரையிறுதியில் பயஸ் ஜோடி

  ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ்-செக்.குடியரசின் ரடேக் ஸ்டெபானெக் ஜோடி முன்னேறியுள்ளது.

  இந்த ஜோடி புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் ஜூலியன் நோவ்லே-ஸ்லோவேகியாவின் ஃபிலிப் போலாசெக் ஜோடியை வீழ்த்தியது.

  பயஸ் ஜோடி தங்களின் அரையிறுதியில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்-மார்க் லோபஸ் ஜோடியை சந்திக்கிறது.

  மார்செல்-லோபஸ் ஜோடி தங்களின் காலிறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரேசிலின் புருனோ-ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் ஜோடியைத் தோற்கடித்தது.

  விடைபெற்றார் ஆன்டி ரோடிக்

  அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். அமெரிக்க ஓபனில் பங்கேற்று விளையாடிய அவர், புதன்கிழமை நடைபெற்ற ஒற்றையர் 4-வது சுற்றில் 7-6, 6-7, 2-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஜுவன் மார்ட்டினிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தோடு அவரின் 12 ஆண்டுகால சர்வதேச டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

  ஏற்கெனவே அமெரிக்க ஓபனோடு ஓய்வு பெறுவதாக ரோடிக் அறிவித்திருந்தார். 4-வது சுற்றில் தோற்றதையடுத்து ஓய்வுபெறும் தருணத்தில் சொந்த நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க பேசிய அவர், "ஒவ்வொரு நிமிடத்தையும் மிகவும் ரசித்து விளையாடினேன். ஓய்வுபெறும் இந்தத் தருணத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் பேச முடியாமல் தடுமாறு    வது இதுதான் முதல்முறை' என்றார்.

  2000-மாவது ஆண்டில் தொழில்முறை வீரராக உருவெடுத்த ஆன்டி ரோடிக் 2003-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனில் சாம்பியன் ஆனார். இதன்பிறகு தனது சிறப்பான ஆட்டத்தால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். தனது 12 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் 32 சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தாலும், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அமெரிக்க ஓபனில் மட்டுமே ஒரு முறை பட்டம் வென்றுள்ளார்.

  விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 3 முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியபோதும், துரதிருஷ்டவசமாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் 4 முறை அரையிறுதி வரை முன்னேறியுள்ளார். பிரெஞ்சு ஓபனில் ஒரு முறை 4-வது சுற்று வரை முன்னேறியுள்ளார். அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கடைசி அமெரிக்கர் ஆன்டி ரோடிக் என்பது குறிப்பிடத்தக்கது.

  ரோடிக்கின் ஓய்வு குறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ், "உங்களுக்காக கண்ணீர் சிந்துகிறேன். கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் ஆட்டத்தை இனி பார்க்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்' என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai