சுடச்சுட

  
  spt2

  விசாகப்பட்டினம், செப்.7: இந்திய-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  புற்றுநோயிலிருந்து மீண்டுள்ள அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் இந்த ஆட்டத்தில் களமிறங்குவது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

  யுவராஜின் வருகை: கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்த யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

  கடும் போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து மீண்ட அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பயிற்சியை முடித்து இப்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கடைசியாக 2011 நவம்பரில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். சர்வதேச இருபது ஓவர் போட்டியில் 2011 ஜனவரியில் விளையாடினார். அதன்பிறகு ஓர் ஆண்டு 8 மாதங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் இருபது ஓவர் போட்டியில் களமிறங்குகிறார்.

  இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் யுவராஜுக்கு இந்தப் போட்டி மிக முக்கியமானதாக அமைந்துள்ளது. இருபது ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் போட்டி என அடுத்தடுத்து போட்டிகள் உள்ள நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் வெற்றி பெறும் முனைப்போடு களமிறங்குகிறது இந்தியா.

  மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஹர்பஜன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். உலகக் கோப்பை, இருபது ஓவர் உலகக் கோப்பை இரண்டிலுமே யுவராஜ், ஹர்பஜன் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அமைந்தது.

  பலம் வாய்ந்த பேட்டிங்: அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் விராட் கோலி, இருபது ஓவர் தொடரிலும் ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேவாக், கம்பீர், ரெய்னா, தோனி என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது இந்திய அணி. ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. இதை அவர் பயன்படுத்திக் கொள்ள தவறும்பட்சத்தில் அவரின் இடத்தைப் பிடிக்க மனோஜ் திவாரி காத்திருக்கிறார்.

  வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகீர்கான், இர்ஃபான் பதான் கூட்டணி கவனிக்கும் என்று தெரிகிறது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய பாலாஜி இடம்பெறுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

  டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து வீரர்களை பந்தாடிய அஸ்வின், இருபது ஓவர் தொடரிலும் அவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பந்துவீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மீண்டும் வெட்டோரி: நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் இந்திய ஆடுகளங்களில் மிகுந்த அனுபவம் கொண்டவரான பிரென்டன் மெக்கல்லம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. பெங்களூர் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ராஸ் டெய்லர், ஆல்ரவுண்டர் ஜேக்கப் ஓரம், ஜேம்ஸ் பிராங்க்ளின் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியும். இவர்கள் அனைவருமே ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள்.

  டெஸ்ட் தொடரில் விளையாடாத மூத்த வீரரான டேனியல் வெட்டோரி மீண்டும் அணிக்குத் திரும்பியது கூடுதல் பலம். பேட்டிங், சுழற்பந்து வீச்சு என இரு துறைகளிலும் நியூஸிலாந்துக்கு பலம் சேர்க்கிறார் வெட்டோரி. வேகப்பந்து வீச்சில் டிம் செüதி, டக் பிரேஸ்வெல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

  கடந்த சில நாள்களாக விசாகப்பட்டினத்தில் மழை பெய்து வந்தாலும், வெள்ளிக்கிழமை மழை பெய்யவில்லை. நல்ல வெயில் இருந்தது. இதனால் மழையால் ஆட்டத்துக்குப் பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ராசியான மைதானம்: இந்த மைதானம் இந்திய அணிக்கு மிக ராசியான மைதானம் ஆகும். இதுவரை இந்திய அணி இங்கு 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. கேப்டன் தோனி இங்குதான் முதல் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் 148 ரன்கள் குவித்தார்.

  அணி விவரம்

  இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), கெüதம் கம்பீர், வீரேந்திர சேவாக், விராட் கோலி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இர்ஃபான் பதான், ஹர்பஜன் சிங், அஸ்வின், ஜாகீர் கான், லட்சுமிபதி பாலாஜி, அசோக் திண்டா, பியூஷ் சாவ்லா, மனோஜ் திவாரி.

  நியூஸிலாந்து: ராஸ் டெய்லர் (கேப்டன்), பிரென்டன் மெக்கல்லம், மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் பிராங்க்ளின், ராப் நிகோல், ஜேக்கப் ஓரம், டக் பிரேஸ்வெல், டேனியல் வெட்டோரி, டிம் செüதி, ஆடம் மில்னே, நாதன் மெக்கல்லம், ரூனி ஹிரா, கெய்ல் மில்ஸ், பி.ஜே.வாட்லிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai