சுடச்சுட

  
  spt5

  திருநெல்வேலி, செப். 7: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றுக்கு திருநெல்வேலி மற்றும் திருச்சி அணிகள் முன்னேறியுள்ளன.

  பாளையங்கோட்டை ஹாக்கி நலச் சங்கத்தின் சார்பில் பெல்பின்ஸ் கோப்பைக்கான 15-வது மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 5-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

  காலிறுதி: வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதியில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுப் பள்ளி அணியும், விருதுநகர் கே.வி.எஸ். பள்ளி அணியும் மோதின. இதில் ஒய்.எம்.சி.ஏ. பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.

  2-வது காலிறுதி ஆட்டத்தில் திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளி அணியும், மதுரை திருநகர் இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி காஜா மியான் பள்ளி அணி 4- 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

  அரையிறுதி: மாலையில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி அணியும், திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் பள்ளி அணியும் மோதின. இதில், கிறிஸ்து ராஜா பள்ளி அணி 10-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

  மற்றொரு அரையிறுதியில் திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளி அணியும், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டுப் பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

  இறுதி ஆட்டம் சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதில் பாளையங்கோட்டை கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி அணியும், திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளி அணியும் விளையாடுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்குகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai