சுடச்சுட

  

  துபை, செப்.8: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி கண்டது பாகிஸ்தான்.

  முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவும் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுக்க, ஆட்டம் "டை'யில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை (இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் விளையாடும் வாய்ப்பு) கடைப்பிடிக்கப்பட்டது.

  அதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுக்க, பின்னர் ஆடிய பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

  அந்த அணியில் இம்ரான் நசிர் ரன் ஏதுமின்றி வீழ்ந்தாலும், முகமது ஹபீஸ்-நசிர் ஜம்ஷெத் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 11.1 ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்தது. 36 பந்துகளைச் சந்தித்த ஜம்ஷெத் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ஹபீஸ் 42 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கம்ரான் அக்மல் 26 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது.

  ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ஸ்டார்க், கிறிஸ்டியான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

  வார்னர் அதிரடி: பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர், ஹபீஸ் வீசிய 2-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார். ஆனால் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

  வழக்கம் போல் இந்த ஆட்டத்திலும் அஜ்மலே, ஆஸ்திரேலியாவின் சரிவைத் தொடங்கி வைத்தார்.

  19 பந்துகளைச் சந்தித்த வார்னர் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து அஜ்மல் பந்துவீச்சில் போல்டு ஆனார். வாட்சன் 33 ரன்களில் வீழ்ந்தார். கேமரூன் ஒயிட் 5, மைக் ஹசி 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் கேப்டன் பெய்லி வேகமாக விளையாடியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் உயர்ந்தது.

  கடைசி இரு ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரில் பெய்லி இரு பவுண்டரிகளை விரட்ட, கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

  அப்துல் ரசாக் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் பெய்லி 42 ரன்களில் (2 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. ஆனாலும் அந்த ஓவரின் 5-வது பந்தில் கம்மின்ஸ் சிக்ஸர் அடிக்க ஸ்கோர் சமநிலையை எட்டியது. ஆனால் அடுத்த பந்தில் கம்மின்ஸ் ஆட்டமிழக்க ஆட்டம் "டை'யில் முடிந்தது. சர்வதேச அளவிலான இருபது ஓவர் ஆட்டம் "டை'யில் முடிவது இது 6-வது முறையாகும்.

  பாகிஸ்தான் தரப்பில் அஜ்மல், அப்துல் ரசாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஜ்மல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான். இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி ஆட்டம் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai