சுடச்சுட

  
  9spt3

  சென்னை, செப். 10: இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

  ஏற்கெனவே விசாகப்பட்டினத்தில் நடைபெற இருந்த முதல் 20 ஓவர் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. எனவே இந்த ஆட்டம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  எதிர்பார்ப்பு அதிகம்: இது தவிர புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட அதிரடி வீரர் யுவராஜ், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் களமிறங்குகிறார். எனவே அவர் மீது அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது. அவர் சென்னையில் தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்குவது உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

  இதற்கு முன்பு 2011 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக யுவராஜ் சிங் 20 ஓவர் ஆட்டத்தில் பங்கேற்றார். கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்றதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். 30-வயதாகும் யுவராஜுக்கு இது கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸôகவே கருதப்படுகிறது.

  நீண்ட இடைவெளிக்குப் பின் ஹர்பஜன் சிங்: யுவராஜ் தவிர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அணிக்குத் திரும்பியுள்ளார். எனவே இந்த ஆட்டத்தில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

  பேட்டிங் பலம்: 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணி பேட்டிங்கில் மிக பலமாக உள்ளது. தொடக்கவீரர்கள் கம்பீர், சேவாக், கேப்டன் தோனி, இளம் வீரர்கள் கோலி, ரோஹித் சர்மா, ரெய்னா ஆகியோர் 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். ஏற்கெனவே ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு அணிகளில் இடம் பெற்று தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளார்கள். இவர்களுடன் யுவராஜ் சிங்கும் இந்திய அணியின் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்.

  வேகப்பந்து வீச்சில் இர்ஃபான் பதான், ஜாகீர் கான், அசோக் திண்டா ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஹர்பஜன் சிங், அஸ்வின், சாவ்லா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளனர். எனினும் போட்டி தொடங்கும்போதுதான் எத்தனை பந்து வீச்சாளர்கள் களமிறங்குவார்கள் என்பது தெரியவரும்.

  மழை விளையாடும்? எனினும் சென்னையில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்துள்ளது. இது செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்தால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.

  20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை இலங்கையில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. எனவே அங்கு வெற்றி பெறுவதற்கு இப்போட்டியை முன்னோட்டமாக அமைத்துக் கொள்ளும் நோக்கிலும், இத்தொடரை வெல்லும் நோக்கத்துடனும் இந்திய அணி களமிறங்கும்.

   அதே நேரத்தில் இந்தியாவில் விளையாடிய இரு டெஸ்ட் ஆட்டங்களிலும் நியூஸிலாந்து  தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இச்சுற்றுப் பயணத்தில் நியூஸிலாந்து விளையாடும் கடைசி ஆட்டமும் இது. எனவே வெற்றியுடன் பயணத்தை முடித்துக் கொள்ளவே அந்த அணி வீரர்கள் விரும்புவார்கள். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

  நேரம்: இரவு 7 மணி

  நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் கிரிக்கெட்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai