சுடச்சுட

  
  spt2

  சென்னை, செப். 11: நியூஸிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 1-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து வென்றது. டெஸ்ட் தொடரை

  முழுமையாக இழந்த நியூஸிலாந்து இருபது ஓவர் தொடரை வென்றுள்ளது.

  91 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து வீரர் மெக்கல்லம் ஆட்டநாயகன், தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

  முன்னதாக விசாகப்பட்டினத்தில், முதல் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

  அதிர்ச்சி தொடக்கம்: டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ராப் நிகோல், ஜாகீர் கான் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்தை தவறாகக் கணிக்கவே அது லெக் ஸ்டெம்பை தகர்த்தது. நிகோல் ரன் ஏதுமின்றி வெளியேறினார்.

  இர்பான் பதான் வீசிய 2-வது ஓவரின் 3-வது பந்தில் அடித்து ஆட முற்பட்ட மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதையடுத்து பிரென்டன் மெக்கல்லத்துடன் இணைந்தார் கேன் வில்லியம்சன்.

  வில்லியம்சன் நிதானமாக விளையாடினாலும், மெக்கல்லம் வேகமாகவே விளையாடினார். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 69 ரன்களை எட்டியது.

  மெக்கல்லம் அதிரடி: பாலாஜி வீசிய 11-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, 32 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அரை சதமடித்தார் மெக்கல்லம். 13-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. இர்பான் பதான் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் கேன் வில்லியம்சன், லெக் திசையில் ஸ்கூப் ஷாட் அடிக்க, அது அஸ்வின் கையில் தஞ்சம் புகுந்தது. 26 பந்துகளைச் சந்தித்த அவர் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். வில்லியம்சன்-மெக்கல்லம் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது.

  இதையடுத்து கேப்டன் ராஸ் டெய்லர் களம் புகுந்தார்.

  பதான் வீசிய 17-வது ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த மெக்கல்லம் அடுத்த பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். 55 பந்துகளைச் சந்தித்த அவர், 3 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்தார்.

  20 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. டெய்லர் 25 ரன்களும், ஜேக்கப் ஓரம் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

  இந்தியத் தரப்பில் இர்பான் பதான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். ஜாகீர்கான், பாலாஜி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். உள்ளூர் நாயகன் அஸ்வின் 3 ஓவர்களை வீசி 34 ரன்களை வாரி வழங்கினார். அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

  கோலி 70: 168 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் இன்னிங்ûஸ கெüதம் கம்பீரும், விராட் கோலியும் தொடங்கினர். கோலி வேகமாக விளையாட ரன் வேகம் உயர்ந்தது. 3-வது ஓவரில் கம்பீர் 3 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். கோலி தொடர்ந்து பவுண்டரிகளை விரட்ட 6.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது இந்தியா.

  நியூஸிலாந்து பெüலர்களை தொடர்ந்து சிதறடித்த கோலி, வெட்டோரி பந்துவீச்சில் பவுண்டரி அடித்து இருபது ஓவர் போட்டியில் 2-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எட்டியது இந்தியா.

  11-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்தார். ரெய்னா-கோலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 7.2 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தது.

  இதையடுத்து ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் களம் புகுந்தார் யுவராஜ் சிங். வெட்டோரி வீசிய 13-வது ஓவரின் 2-வது பந்தில் யுவராஜ் பிரமாண்ட சிக்ஸர் (88. மீ. தூரம்) ஒன்றை சிக்ஸர் அடிக்க மைதானமே அதிர்ந்தது.

  பிராங்க்ளின் வீசிய 14-வது ஓவரின் 2-வது பந்தை கோலி ஸ்ட்ரெய்ட் திசையில் அடிக்க, அது மாற்று வீரரான டிம் செüதியின் கையில் தஞ்சம் புகுந்தது. 41 பந்துகளைச் சந்தித்த கோலி 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்தார்.

  இறுதியில் பரபரப்பு: இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி, மெதுவாக ஆடியதால் இந்தியா வெற்றி பெற கடைசி இரு ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஓரம் வீசிய 19-வது ஓவரில் யுவராஜ் சிக்ஸர் அடிக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன.

  பிராங்க்ளின் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் யுவராஜ் ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்து வைடானது. அடுத்த பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, கடைசி 3 பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் 4-வது பந்தில் யுவராஜ் கிளீன் போல்டு ஆனார். 26 பந்துகளைச் சந்தித்த அவர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்கள் எடுத்தார்.

  இந்தியா தோல்வி: கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பேட் செய்த ரோஹித் சர்மா 2 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இந்தியா ஒரு ரன்னில் தோல்வி கண்டது. தோனி 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  யுவராஜுக்கு உற்சாக வரவேற்பு

  புற்றுநோயிலிருந்து குணமாகி, மீண்டும் களமிறங்கிய அதிரடி வீரர் யுவராஜுக்கு சென்னை ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர் ஆட்டத்தின் 6-வது ஓவரை வீச வந்தபோது, கரவொலி எழுப்பியும், வாழ்த்துப் பதாகைகளை ஏந்தியும் அவரை வரவேற்றனர்.

  அவர் முதல் பந்தை வீசியபோது ரசிகர்கள் எழுப்பிய உற்சாகக் கூச்சல் காரணமாக மைதானமே அதிர்ந்தது.

  மைதானத்தில் யுவராஜின் தாய்: யுவராஜின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காக அவரது தாய் ஷப்னம் சிங், சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். பெவிலியன்

  பகுதியில் அவர் அமர்ந்திருந்தார்.

  பாலாஜி அறிமுகம்

  3 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய பாலாஜிக்கு இந்தியாவுக்காக மீண்டும் ஆடும் வாய்ப்பு சொந்த ஊர் ரசிகர்கள் முன்னிலையில் கிடைத்தது. 5-வது ஓவரை அவர் வீச வந்தபோது பலத்த கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர். சர்வதேச இருபது ஓவர் போட்டியில் இப்போதுதான் பாலாஜி களமிறங்கியுள்ளார். 4 ஓவரில் 33 ரன் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.  சேவாக் இல்லை

  இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. ஹர்பஜனுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.  3 கேலரிகள் காலி

  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) அனுமதி கிடைக்காததால் 3 கேலரிகள் வழக்கம்போல் காலியாகவே இருந்தன. அதே

  நேரத்தில் ஐபிஎல் போட்டியின் போது சென்னை உயர் நீதிமன்றத்தின்

  அனுமதி பெற்று இந்த 3 கேலரிகளும் ரசிகர்களுக்கு திறந்துவிடப்பட்டது.

  சுருக்கமான ஸ்கோர்

  நியூஸிலாந்து 167/5வி (20 ஓவர்) (மெக்கல்லம் 91,  வில்லியம்சன் 28, இர்பான் பதான் 3வி/33)

  இந்தியா 166/4வி (20 ஓவர்) (கோலி 70, யுவராஜ் சிங் 34, மில்ஸ் 2வி/17, ஃபிராங்ளின் 2வி/26)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai