சுடச்சுட

  

  உடனடி சிகிச்சைக்கு வழியில்லாமல் மூச்சுவிடப் போராடிய வீராங்கனை!

  By ஏ.வி.பெருமாள்  |   Published on : 26th September 2012 11:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  சென்னை, செப்.12: தேசிய தட களப் போட்டியில் கீழே விழுந்த வீராங்கனைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால், அவர் மூச்சுவிடப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  இந்திய தட கள சம்மேளனத்தின் (ஏ.எஃப்.ஐ.) சார்பில் 52-வது தேசிய சீனியர் தட களப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்ற மகளிர் 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் கேரள வீராங்கனை ஆர்யா பங்கேற்றார். அவர் ஓடிக்கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்தார்.

  ஆனால் மைதானத்தில் எவ்வித மருத்துவ வசதிகளும் இல்லாததால் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைக்கூட அளிக்கப்படவில்லை. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் போராடினார். அவரை அங்கிருந்து எடுத்துச் செல்வதற்கு தூக்குக் கட்டில் (ஸ்ட்ரெட்சர்) வசதிகூட இல்லை. இதனால் சக வீராங்கனைகளும், பயிற்சியாளர்களுமே அவரை தூக்கிச் சென்றனர்.

  மருத்துவக் குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. இதனால் 108 ஆம்புலன்ஸ், மைதானத்தை வந்தடைய மேலும் 15 நிமிடங்கள் ஆனது. இதன்பிறகே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  ஆர்யா மூச்சுவிடப் போராடியதைப் பார்த்த சக வீரர், வீராங்கனைகள் பீதியில் உறைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இப் போட்டியில் குறைந்தபட்ச மருத்துவ வசதிகூட மறுக்கப்பட்டிருப்பது பெரும் வேதனையளிப்பதாக இருந்தது.

  தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும்போது தலைமை மருத்துவர் அடங்கிய மருத்துவக் குழு, முதலுதவி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை உறுதி செய்திருக்க வேண்டும். இதுதவிர, பிசியோதெரபிஸ்ட் ஒருவரையும் போட்டி நடைபெறும் இடத்தில் அமர்த்தியிருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுபோன்ற எந்த வசதியுமே செய்யப்படவில்லை. இதனாலேயே ஆர்யா பெரும் அவதிக்குள்ளானார் என்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குற்றம்சாட்டினர்.

  பல்வேறு தனியார் மருத்துவமனைகள் ஆம்புலன்ஸ் வசதியை அளிப்பதற்குத் தயாராக உள்ள நிலையில், அதைக்கூட ஏஎஃப்ஐ செய்யத் தவறிவிட்டது என்றும் அவர்கள் கூறினர்.

  இதுதொடர்பாக பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், "ஏ.எஃப்.ஐ.யின் அலட்சிய போக்கால் திறமை வாய்ந்த வீராங்கனை ஒருவர் உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டுவிட்டது. பள்ளிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளின்போதுகூட மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

  ஆனால் இவ்வளவு பெரிய போட்டியை நடத்தும்போது மருத்துவ வசதி இல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது' என்றார்.

  போட்டியைக் காண்பதற்காக மைதானத்திற்கு வந்திருந்த வீரர், வீராங்கனைகளின் பெற்றோர்கள் சிலர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "எங்கள் கண்முன்னே வீராங்கனை ஒருவர் உயிருக்குப் போராடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று ஆர்யாவுக்கு ஏற்பட்ட நிலைதான், நாளை மற்றவர்களுக்கும் ஏற்படும்.

  எனவே எதிர்காலத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டாலொழிய, இளம் தலைமுறையினர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்வர மாட்டார்கள்' என்றனர்.

  ஆர்யா இப்போது நலமோடு இருக்கிறார். ஆர்யா மூச்சுவிடப் போராடிய சம்பவத்துக்குப் பிறகே மருத்துவ வசதிகளும், ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இப்போது செய்துள்ள இந்த ஏற்பாடுகளை முன்னரே செய்திருந்தால், ஆர்யாவும் அவதிப்பட்டிருக்கமாட்டார், இந்திய தட கள சங்கத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டிருக்காது. பிரச்னை ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பது என்பது நம் நாட்டில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதற்கு இந்திய தட கள சங்கமும் விதி விலக்கல்ல!

  இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், நம்முடைய விளையாட்டு அமைப்புகளின் செயல்பாடு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். அடிப்படை வசதிகளே மறுக்கப்படும் இப்படிப்பட்ட சூழலில், நம்முடைய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

  எத்தனைப் போட்டிகள் நடத்தினோம் என்பதைவிட, எப்படி நடத்தினோம் என்பதுதான் முக்கியம். இதை இனியாவது விளையாட்டு அமைப்புகள் உணர வேண்டும். வீரர், வீராங்கனைகளுக்கு மருத்துவ வசதியை உறுதி செய்ய வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai