சுடச்சுட

  

  சென்னை, செப்.13: பி.வி.பி. நிறுவனத்தின் ரூ.900 கோடி ஏலத்தொகையை நிராகரித்தது டெக்கான் கிரானிக்கிள் ஹோல்டிங் குழுமம்.

  இந்த விவகாரம் தொடர்பாக வரும் சனிக்கிழமை சென்னையில் நடைபெறவுள்ள பிசிசிஐ கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

  2-வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அணியை விற்கப் போவதாக அதன் உரிமையாளரான டெக்கான் குழுமம் அறிவித்தது. இதையடுத்து அதற்கான ஏலம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  டெக்கான் அணியை வாங்க பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பி.வி.பி. குழுமம் மட்டுமே ஏலம் எடுக்க முன்வந்தது. அந்த அணி ரூ.900 கோடிக்கு டெக்கான் அணியை ஏலம் கேட்டது.

  ஆனால் அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்றுகூறி ஏலத்தை நிராகரித்தது டெக்கான் குழுமம்.

  இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சீனிவாசன் கூறுகையில், "பி.வி.பி. குழுமம் நிர்ணயித்த தொகையை டெக்கான் குழுமம் ஏற்றுக்கொள்ளவில்லை.

  இந்த விவகாரத்தில் அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று நாங்களும் ஆராய்ந்து வருகிறோம். ஏல விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது. பி.வி.பி. குழுமம் நிர்ணயித்த தொகை போதுமானதாக இல்லாததால், நிராகரித்துவிட்டதாக டெக்கான் குழுமத்தின் சார்பில் எங்களிடம் தெரிவிக்கப்பட்டது' என்றார்.

  இப்போது ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீண்டும் டெண்டர் கோரப்படுமா? என்று கேட்டபோது, "அதை நீங்கள் டெக்கான் குழுமத்திடம்தான் கேட்கவேண்டும். இப்போதைய நிலையில் அணியை விற்பனை செய்வது தொடர்பாக சரியான முடிவெடுக்குமாறு டெக்கான் குழுமத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு மேலும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

  இதன்பிறகு பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெக்கான் குழுமத்தால் ஏலம் நிராகரிக்கப்பட்டதில் பிசிசிஐக்கு எவ்வித பங்கும் இல்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai