சுடச்சுட

  
  spt4

  கொழும்பு, செப்.15: இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா.

  இந்திய வீரர் இர்ஃபான் பதான் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியை சரிவுக்குள்ளாக்கினார்.

  இலங்கைத் தலைநகர் கொழும்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய இலங்கை 19.3 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் கம்பீரும், சேவாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மலிங்கா வீசிய பந்து கம்பீரின் வலது மணிக்கட்டை பதம்பார்த்தது. இதையடுத்து அவர் 5 ரன்களோடு "ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார்.

  ரெய்னா, சேவாக் ஆகியோர் தலா 12 ரன்களிலும், கோலி 8, யுவராஜ் சிங் 11 ரன்களிலும் வெளியேற 8.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து இந்தியா தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும், கேப்டன் தோனியும் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

  இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. 26 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

  தோனி ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்க்க 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது இந்தியா. இர்ஃபான் பதான் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இலங்கைத் தரப்பில் நுவான் குலசேகரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

  இலங்கை தோல்வி: 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர் முனவீரா 3 ரன்களில் இர்ஃபான் பதான் பந்துவீச்சில் போல்டு ஆனார். தில்ஷான் 1 ரன்னில் வீழ்ந்தார்.

  மேத்யூஸ் 16 ரன்கள் எடுத்து பாலாஜி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை.

  அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடிய சங்ககாராவை 32 ரன்களில் வெளியேற்றினார் ஹர்பஜன் சிங். திரிமன்னே 24, பெரெரா 10, கேப்டன் ஜெயவர்த்தனா ரன் ஏதுமின்றியும், ஜீவன் மென்டிஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

  குலசேகரா, மலிங்கா ஆகியோர் ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னரே எல்.பாலாஜி பந்துவீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்ஸ் 19.3 ஓவர்களில் 120 ரன்களில் முடிவுக்கு வந்தது.

  இந்தியத் தரப்பில் இர்ஃபான் பதான் 5 விக்கெட்டுகளையும், எல்.பாலாஜி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  இந்தியா-பாகிஸ்தான் மோதல்: திங்கள்கிழமை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானைச் சந்திக்கிறது.

  உலகக் கோப்பை போட்டி 18-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. இந்த ஆட்டம் 19-ம் தேதி நடைபெறுகிறது.

  வங்கதேசம் வெற்றி: சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்கதேசம் 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  ஆஸ்திரேலியா வெற்றி: நியூஸிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து 17 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai