சுடச்சுட

    

    ஐ.பி.எல். போட்டியிலிருந்து டெக்கான் அணியை நீக்கியது சரியே: பி.சி.சி.ஐ.

    Published on : 26th September 2012 11:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி, செப்.15:ஐ.பி.எல். போட்டியிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியை நீக்கியது சரியே என்று பிசிசிஐ கூறியுள்ளது.

    இதுதொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்ஜய் ஜக்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பது:

    டெக்கான் குழுமத்தால் இனி மேல் அணியை நிர்வகிக்க முடியாது என்பது உறுதியாகத் தெரிந்ததால் மிகவும் சிந்தித்தே டெக்கான் அணியை நீக்குவது என முடிவெடுத்தோம்.

    தாங்கள் விதிகளை மீறவில்லை, ஒருவேளை மீறியிருந்தாலும், யெஸ் வங்கி எங்களுக்கு நிதி உதவி செய்யும் வரையில் அணியை நீக்கக்கூடாது என்று கூறி சட்டரீதியான நடவடிக்கையில் இறங்குவோம் என்று டெக்கான் குழுமம் பிசிசிஐக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. அதனாலேயே அந்த அணியை நீக்கும் அதிரடி முடிவை எடுக்கும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது. டெக்கான் அணிக்கு பிசிசிஐ சில உதவிகளை செய்தபோதிலும், பிசிசிஐ நிர்ணயித்திருந்த கால கெடுவுக்குள் நிதி விவகாரம் தொடர்பான பிரச்னையை தீர்க்க முடியவில்லை என டெக்கான் குழுமம் ஒப்புக்கொண்டது. வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்குவதாக கடந்த மே மாதத்திலிருந்தே கூறி வந்தாலும், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. டெக்கான் அணியின் பிரச்னையை தீர்ப்பதற்காக பிசிசிஐ எடுத்த அனைத்து முயற்சிகளும் டெக்கான் குழுமத்தால் நிராகரிக்கப்பட்டன.

    வீரர்களுக்கு ஊதியம் வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க டெக்கான் குழுமம் மறுத்ததாலும், இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும் டெக்கான் அணி நீக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    டெக்கான் ஹோல்டிங் கிரானிக்கிள் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து தங்களிடம் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணியை விற்பது என்ற முடிவை எடுத்தது.

    இதற்காக சென்னையில் கடந்த வியாழக்கிழமை ஏலம் நடைபெற்றது. அப்போது பி.வி.பி.வெஞ்சர்ஸ் குழுமம் நிர்ணயித்த ரூ.900 கோடி தொகை போதாது என்று கூறி அதை நிராகரித்தது டெக்கான் குழுமம்.

    இடைக்காலத் தடையில்லை: ஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் அணியை நீக்கியது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் டெக்கான் குழுமம் இடைக்காலத் தடை பெற்றதாக வெளியான செய்தியை பிசிசிஐ மறுத்துள்ளது.

    ஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் அணியை பிசிசிஐ நீக்கியதற்கு மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை முற்றிலும் மறுத்துள்ள பிசிசிஐ மேலும் கூறியிருப்பது: இது தொடர்பான வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணை நடைபெறுகிறது. பிசிசிஐயின் முடிவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக வெளியான செய்தி தவறானது என்று குறிப்பிட்டுள்ளது.

    புதிய அணி

    வரும் ஐபிஎல் போட்டியில் புதிதாக ஓர் அணியை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    டெக்கான் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தால், வரும் ஐபிஎல் போட்டியில் புதிய அணியோடு சேர்த்து 9 அணிகள் பங்கேற்கும். டெக்கானுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் 10 அணிகள் விளையாடும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai