சுடச்சுட

    
    spt1

    கொழும்பு, செப். 17: இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

    ஒருநாள் கிரிக்கெட் உலக சாம்பியனான இந்திய அணி, இந்த உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அதிரடி வீரர் யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

    இப்போது நடைபெறுவது 4-வது 20-வது ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். 2007-ம் ஆண்டில் முதல்முறையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்தது. அதற்குப் பின் நடைபெற்ற இரு போட்டிகளிலும் சூப்பர் 8 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது. எனவே இந்த முறை நமது அணி கோப்பையை வெல்ல வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனினும் இப்போது 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 7-வது இடத்தில்தான் உள்ளது.

    வழக்கமான இந்திய அணி: இந்திய அணியின் பேட்டிங் வழக்கம்போல வலுவாக உள்ளது. அதே நேரத்தில் பந்து வீச்சு பலவீனமாக உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக உள்ளதும், பந்துவீச்சு மோசமாக உள்ளதும் அப்பட்டமாக வெளிப்பட்டது.

    எனினும் இலங்கையில் போட்டி நடப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயம். ஏனெனில் இங்கு பல ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இலங்கையின் காலநிலையும் இந்திய வீரர்களுக்கு சாதகமாக அமையும்.

    விராட் கோலி தொடர்ந்து அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடி வருவது இந்திய அணிக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. கம்பீர், சேவாக், தோனி, ரெய்னா, யுவராஜ் ஆகியோரும் சிறப்பாக விளையாடினால், இந்திய அணி எந்த இலக்கையும் எட்ட முடியும்.

    உலகக் கோப்பையை வென்ற பின் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்கவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தது. இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிராக வெற்றிகளைப் பெற்றது ஆறுதலாக அமைந்தாலும், அண்மையில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் தோல்வியடைந்தது எதிர்பாராததாகும்.

    சவால் அளிக்கும் அணிகள்: அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என போட்டியில் பங்கேற்கும் முக்கிய அணிகள் அனைத்துமே 20 ஓவர் போட்டியில் சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

    மேற்கிந்தியத் தீவுகளின் எழுச்சி: குறிப்பாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்கள் சிறப்பான அனுபவத்தைப் பெற்றுள்ளனர். முக்கியமாக கிறிஸ் கெயில் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு அச்சமூட்டும் வகையில் விளையாடுவார்.

    பொல்லார்ட், பிராவோ ஆகியோரும் அந்த அணிக்கு வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் சுனில் நாராயண் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவார். ஐபிஎல் போட்டியில் அவரது பந்து வீச்சில்தான் அனைத்து நாட்டு வீரர்களும் திணறினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் சாம்பியனாக அவர் முக்கியக் காரணமாக இருந்தார் என்பதை மறந்துவிட முடியாது.

    இந்த உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ள அணியாக மேற்கிந்தியத் தீவுகள் கணிக்கப்பட்டுள்ளது.

    இதே போல நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, போட்டியை நடத்தும் இலங்கை ஆகியவையும் வலுவாகவே உள்ளன. தென்னாப்பிரிக்க அணியில் ஆம்லா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். டி வில்லியர்ஸ், டு பிளெஸிஸ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

    அல்பி மோர்கல் பேட்டிங், பந்து வீச்சு என இரு பிரிவிலும் அசத்துவார். ஸ்டெயின் பந்து வீச்சை எதிர்கொள்வதும் கடினம்தான். எனவே பந்துவீச்சு, பேட்டிங் என இரு பிரிவிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது.

    இவை தவிர பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளும் வலுவாகவே உள்ளன. வங்கதேசம் வெற்றிகளைக் குவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் அம்பணத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டம் ஸ்டார் கிரிக்கெட் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.



    தோனி மீது நம்பிக்கை

    இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் தோனி மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக 20 ஓவர் ஆட்டத்தில் தான் தலைசிறந்த கேப்டன் என்பதை தோனி பல்வேறு முறை நிரூபித்துள்ளார். ஆட்டத்தின் பரபரப்பான கடைசி கட்டத்தில் தனது சிறப்பான பேட்டிங் மூலம் பலமுறை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளதை எளிதில் மறந்துவிட முடியாது.

    ஐபிஎல் போட்டியில் அவரது தலைமையில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் இருமுறை ஐபிஎல் சாம்பியன் ஆனது. இருமுறை இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. இதுதவிர சாம்பியன் லீக் ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி பட்டம் வென்று தந்தார். எனவே இந்த உலகக் கோப்பை போட்டியிலும் அவரது சிறப்பான தலைமையும், பேட்டிங்கும் வெற்றிகளைப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகமில்லை.



    போட்டி விவரம்

    இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறை விளையாடும். இதில் பெறும் வெற்றியின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் ஒரு பிரிவுக்கு தலா 4 அணிகள் என இருபிரிவுகள் உருவாக்கப்படும். பின்னர் அப்பிரிவுகளுக்குள் ஆட்டம் நடைபெறும். இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அக்டோபர் 7-ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும். இந்த முறை போட்டி 17 நாள்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 27 ஆட்டங்கள் உள்ளன.

    ஏ பிரிவு: இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்.

    பி பிரிவு: ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்து.

    சி பிரிவு: இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே.

    டி பிரிவு: பாகிஸ்தான், நியூஸிலாந்து, வங்கதேசம்.

    லீக் சுற்று ஆட்டங்கள்

       நாள்                            அணிகள்

    செப்.18            இலங்கை - ஜிம்பாப்வே

    செப்.19            ஆஸ்திரேலியா - அயர்லாந்து

    செப்.19            ஆப்கானிஸ்தான் - இந்தியா

    செப்.20             தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே

    செப்.21             வங்கதேசம் - நியூஸிலாந்து.

    செப்.21             ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து

    செப்.22             இலங்கை - தென்னாப்பிரிக்கா

    செப்.22             ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத்தீவுகள்

    செப்.23             நியூஸிலாந்து - பாகிஸ்தான்

    செப்.23             இங்கிலாந்து - இந்தியா

    செப்.24             அயர்லாந்து - மேற்கிந்தியத்தீவுகள்

    செப்.25             வங்கதேசம் -  பாகிஸ்தான்

    செப்டம்பர் 27 முதல் சூப்பர் 8 சுற்று தொடங்கும்.

    கோப்பையை வென்ற நாடுகள்

    ஆண்டு    சாம்பியன்               2-வது இடம்

    2007            இந்தியா                   பாகிஸ்தான்

    2009            பாகிஸ்தான்          இலங்கை

    2010            இங்கிலாந்து         ஆஸ்திரேலியா

    டெக்கான் அணி விவகாரம்:

    பிசிசிஐ-க்கு எதிராக நீதிமன்றம் உத்தரவுமும்பை, செப். 17: ஐபிஎல் போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதை எதிர்த்து அந்த அணி நிர்வாகம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அந்த அணி நீக்கப்பட்டதற்கு முந்தைய நிலையே தொடர வேண்டுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நிதி நெருக்கடியில சிக்கியுள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐபிஎல் நிர்வாகக் குழு போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அந்த அணியை ரூ.900 கோடிக்கு வாங்க வேறு நிறுவனம் முன்வந்த போதிலும், அதனை ஏற்க உரிமையாளரான டெக்கான் கிரானிக்கிள்  ஹோல்டிங்ஸ் நிறுவனம் முன்வரவில்லை. எனவே அந்த அணி நீக்கப்படுவதாக பிசிசிஐ விளக்கமளித்தது. பிசிசிஐதான் ஐபிஎல் போட்டியை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தங்கள் அணி நீக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை என்று கூறி டெக்கான் நிர்வாகம் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், டெக்கான் அணி நீக்கப்பட்டதற்கு முந்தைய நிலையே தொடர வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது பிசிசிஐ-க்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai