சுடச்சுட

    
    spt2a

    கொழும்பு, செப். 17: பாகிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் பயற்சி ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து வென்றது.

    இலங்கையில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி அதில் பங்கேற்கும் நாடுகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. இதில் கொழும்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கம்பீர், சேவாக் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய அணியின் ஸ்கோர் 4.4 ஓவர்களில் 41 ரன்களாக இருந்தபோது கம்பீர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி களமிறங்கினார். அதிரடியாக விளையாடிய சேவாக் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும்.

    கோலி, ரோஹித் சிறப்பான ஆட்டம்: பின்னர் ரோஹித் சர்மா ஆட்டத்தைத் தொடர்ந்தார். சமீபகாலமாக சிறப்பாக விளையாடாத ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலியும், ரோஹித்தும் அவ்வப்போது பந்துகளை எல்லைக் கோட்டுக்கு வெளியே விரட்டினர். இருவரும் நிலைத்து நின்று விளையாடியதால் ரன்னும் வேகமாக உயர்ந்தது.

    கோலி 34 பந்துகளையும், ரோஹித் 36 பந்துகளையும் சந்தித்து அடுத்தடுத்த ஓவர்களில் அரைசதம் கடந்தனர். 18.1 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 172 ஆக இருந்தபோது ரோஹித் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அடுத்து யுவராஜ் சிங்  களமிறங்கினார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. யுவராஜ் 5 ரன்னும், கோலி 75 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கோலி 47 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரியை விளாசி இந்த ரன்களை எடுத்தார்.

    அடுத்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹஃபீஸ், இம்ரான் நசீர் ஆகியோர் பேட்டிங் தொடங்கினர். அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் நசீர் 13 ரன்களுடனும், ஹஃபீஸ் 38 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நசீர் ஜாம்ஷத், கம்ரான் அக்மல் ஆகியோர் ஜோடி சேந்தனர்.

    தடுமாற்றம்: நசீர் ஜாம்ஷத் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். அப்ரிதியும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 84 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. பாகிஸ்தான் மேலும் 6 ரன்களை சேர்ப்பதற்குள் உமர் அக்மல் (2 ரன்) விக்கெட்டையும் இழந்தது. இதனால் ஆட்டம் இந்திய அணிக்கு சாதகமாகத் திரும்பியது.

    ஆட்டத்தை மாற்றினார் அக்மல்: ஆனால் கம்ரான் அக்மல், ஷோயிப் மாலிக் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சிதறிடித்த அக்மல், வேகமாக ரன் குவித்தார். இதனால் பாகிஸ்தான் இலக்கை நோக்கி முன்னேறியது.

    சிக்ஸர் அடித்து வெற்றி: பாலாஜி வீசிய 19-வது ஓவரில் அக்மல், மாலிக் இருவரும் தலா ஒரு சிக்ஸர் எடுத்தனர். அந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு 19 ரன்கள் கிடைத்தன. இதனால் கடைசி 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை இர்பான் பதான் வீசினார். முதல் பந்தை சிக்ஸருக்கு அக்மல், பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அக்மல் 50 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். இதில் 6 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். ஷோயிப் மாலிக் 18 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்தார். இருவரும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

    அஸ்வின் ஆறுதல்: இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அஸ்வின் மட்டுமே சிறப்பாக பந்து வீசினார். அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். ஜாகீர் கான், பதான், பாலாஜி, ஹர்பஜன் சிங் என மற்ற பந்து வீச்சாளர்கள் அனைவரும் சராசரியாக ஒரு ஓவருக்கு பத்து ரன்களுக்கு மேல் வழங்கினர்.

    தென்னாபிரிக்கா, இங்கிலாந்து வெற்றி:  திங்கள்கிழமை மேலும் இரு பயிற்சி ஆட்டங்களும் நடைபெற்றன. இதில் ஒரு தென்னாப்பிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களே எடுக்க முடிந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai